முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு
இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
சென்னை, 17. 29.04.2010.
தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.
இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.
முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.
சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.
சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.
மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி!
தோழமையுடன்,
க.அருணபாரதி
| ஒருங்கிணைப்பாளர் | இளந்தமிழர் இயக்கம் |
Read more...