வழக்கறிஞர் பூ.அர. குப்புசாமி மறைவுக்கு இளந்தமிழர் இயக்கத்தின் வீரவணக்கங்கள்!!
Monday, February 15, 2010
வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி மறைவு
இளந்தமிழர் இயக்கம் வீரவணக்கம்!
காவிரி நீர் உரிமை மீட்புக்காகவும், தமிழின மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கரூர் வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்கள் கடந்த ஞாயிறன்று (14.02.2010) இரவு, உடல் நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றது.
தமிழக உழவர்களின் உயிர்ச் சிக்கலான காவிரி நீர் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களையும், வழக்குகளையும் முன்னின்று நடத்தியவர் திரு. பூ.அர.குப்புசாமி ஆவார். காவிரிக் காப்புக் குழுவிற்கு அவர் தலைவராகவும் பணியாற்றி வந்தார். காவிரி உரிமையை மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தார். தமிழக ஆற்றுநீர் படுகைகளில் நடந்து வந்த மணற் கொள்ளையை முதன் முதலில் அம்பலப்படுத்தியமை திரு. பூ.அர.குப்புசாமி அவர்களின் அஞ்சாமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
1990களில் கர்நாடக மாநிலத்தில், தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அவர்தம் சொத்துக்கள் சூறையாடப்பட்ட போது, அதற்காக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி நட்ட ஈட்டுத் தொகை வாங்கித் தர பெரும் பாடுபட்டவர் திரு. பூ.அர.குப்பசாமி. தந்தைப் பெரியார் வழியில் சாதி மறுப்புக் கொள்கையில் உறுதியுடன் செயல்பட்டு நூற்றுக்கணக்கான சாதி மறுப்புத் திருமணங்களை நடத்திய திரு.குப்புசாமி, தமிழக ஆற்று நீர் உரிமைச் சிக்கல்களுக்காக மட்டுமின்றி தமிழீழ விடுதலைக்காகவும் குரல் கொடுத்துப் போராடியவர் ஆவார். திரு. குப்புசாமி பெரியார், ஜீவா போன்ற வரலாற்று நாயகர்களுடன் நெருங்கிய தொடர்பு பேணியவர்.
கல் குவாரிகளில் இருந்து சித்தன்னவாசல் குகைக் கோயில் சிற்பங்களைப் பாதுகாத்தவர். ஒரத்துப்பாளையம் அணையில் சேர்ந்த திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு பெற்றுத் தர பாடுபட்டவர்.
திரு.குப்புசாமி காவிரி உரிமை மீட்பில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் செய்து வந்த துரோகங்களை அம்பலப்படுத்தித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். இவரது போர்க்குணத்தை சிறப்பிக்கும் விதமாக, உலகத் தமிழர் பேரமைப்பு, 'தமிழ்த் தேசிய செம்மல் விருது” அளித்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. தம் வீட்டில் பல்வேறு அரிய நூல்களை சேமித்து வைத்து, தனி அருங்காட்சியகத்தையே ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவால், தமிழகத்தின் உரிமை மீட்பு வரலாற்றில் ஏற்பட்டுள்ள, வெற்றிடத்தை, அறிவார்ந்த மாணவர்களும் இளைஞர்களும் நிரப்ப வேண்டும்.
காவிரி நீர்ச்சிக்கல் குறித்து இளந்தமிழர் இயக்கத்தின் வெளியீட்டுப் பிரிவு எடுத்து வருகின்ற ஆவணப்படத்தில், திரு. பூ.அர.குப்புசாமி அவர்களது பேட்டியும், அவர் நடத்தியப் போராட்டங்களின் வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்னாரது நினைவாக, விரைவில் இந்த ஆவணப்படம் வெளியிடப்படும் என்று இளந்தமிழர் இயக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி உரிமை மீட்புப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களுக்கு வீரவணக்கங்கள்!
தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்
நாள் 16.02.2010
இடம் : சென்னை-17.
0 கருத்துகள்:
Post a Comment