நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரசுக்கு ஆதாரங்களுடன் இளந்தமிழர் இயக்கம் கேள்வி

Monday, February 15, 2010

சீக்கியர்களுக்கு ஒரு நீதி! தமிழர்களுக்கு ஒரு நீதியா?
ஆதாரங்களுடன் கேள்வி எழுப்புகிறது இளந்தமிழர் இயக்கம்

இராசீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
நளினியின் விடுதலை அளிக்கக்கூடாது என்று பேச, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்ல என்பதை இளந்தமிழர் இயக்கம் நினைவு+ட்ட விரும்புகின்றது. இது குறித்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியினரை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நளினி விடுதலை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை குறித்த சில செய்திகளை இளந்தமிழர் இயக்கம் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.
இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவருமான இந்திராகாந்தியை, சீக்கியர்களின் புனிதத்தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, அவர் பதவியில் இருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற, சீக்கிய இனத்தைச் சேர்ந்த பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் உள்ளிட்டோரை இன்றளவும் சீக்கியா;கள் தியாகிகளாக போற்றி வருகின்றனர். அவர்களது நினைவு நாள் இன்றும் போற்றுதலுக்குரியதாக சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சீக்கிய இனத்திற்காக தியாகம் செய்தவர்கள்(Martyrs of Sikhism) என சீக்கியர்களின் அதி உயர் பீடமான 'அகால் தக்கட்'(Akal Takhat) அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு சனவரி 6 அன்று பட்டம் சூட்டி கௌரவித்தது. பியாந்த் சிங் உள்ளிட்டோரின் நினைவாக, சிரோன்மணி அகாலி தளம் அமைப்பு, அக்டோபர் 31 2008 அன்று 'தியாகிகள் தினம்' கடைபிடித்தது. தற்போது, நியு+சிலாந்தில் அமைந்துள்ள சீக்கிய மதக் கோவில் ஒன்றில், இவர்களுக்கு படம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே போல, இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியர்களுக்கு, இன்றளவும் சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டும் வருகின்றது. இது குறித்த புகைப்பட ஆதாரத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, கடந்த சனியன்று(13.02.2010) சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில், மக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினரின் பாசிசப் போக்கைக் கண்டித்தனர்.

தமது இனத்தின் மீது தாக்குதல் தொடுத்த பிரதமரை, சுட்டுக் கொன்ற சீக்கியர்களை அவ்வின மக்கள்; இன்றும் போற்றுகிறார்கள் என்பது, அந்த இனத்தின் மீது சீக்கியர்களுக்கு உள்ள பற்றுறுதியை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
தமிழகக் காங்கிரசார் இன்றும் 'அன்னை' என்று போற்றுகின்ற இந்திராகாந்தியை சுட்டுக் கொன்றவர்களை இன்றளவும் சீக்கியர்கள் தியாகிகளாக போற்றுகின்ற நிலையில், அந்த இனத்திற்கே பிரதமர் பதவி கொடுத்தும் அலங்கரித்துப் பார்க்கிறது, காங்கிரஸ் கட்சி. ஆனால், இன்னொருபுறத்தில், இராசீவ் கொலையுடன் தொடர்புடையவர் என்ற ஒரே காரணத்திற்காக நளினியை அவரது குழந்தையின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கூட எண்ணாமல், சாகும் வரைத் சிறைவைக்கக் கூறும் காங்கிரசாரின் நிலை, பாரபட்சமானது.
தமிழீழத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தும் இந்திய அமைதிப்படை நடத்திய அட்டூழியங்களுக்கு எதிர்வினையாகவே இராசீவ் காந்தி கொலை நிகழ்த்தப்பட்டது என இந்திய உச்சநீதிமன்றமே தமது தீர்ப்பில் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையிலும் கூட, இன உணர்வுடன் சீக்கியர்கள் ஏற்றுக் கொண்டதைப் போல, தமிழக மக்கள் இராசீவ்காந்தி கொலையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை துன்பியல் நிகழ்வாகவே கருதுகின்றனர். இருந்தபோதும், தமிழகக் காங்கிரஸ் கட்சியினர், சீக்கியர்களுக்கு எதிராக சீறாமல், தமிழர்களுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து சீறுவது ஏன்? சீக்கியர்களுக்கு ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா? என இளந்தமிழர் இயக்கம் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கேள்வி எழுப்புகின்றது.
இராசீவ் காந்தி கொலை வழக்குத் தீh;ப்பில், நீதிபதி தாமஸ், நளினிக்கு இந்தப் படுகொலை நிகழவிருப்பது குறித்து முன்கூட்டியேத் தெரியவில்லை என்றும், தெரிந்த போதும் அவரால் அதனைத் தடுத்து நிறுத்திப், பின்வாங்க முடியாத சூழல் நிலவியது என்றும் கூறியிருக்கிறார். (ஆதாரம்: இராசீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பு, 1999 SCC (Cr) பக்கம் 787-788). நீதிபதி தாமஸ் அவர்களின் இந்த வாதத்தை புறந்தள்ளி விட்டு, நளினி தான் இராசீவ்காந்தியைத் திட்டமிட்டுக் கொன்றவர் என்பது போல சித்தரிக்க முயலும், தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் உண்மையான குற்றவாளியை மறைப்பதற்குபு துணை போகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது? இராசீவ் கொலை விசாரணையில் பலரை இன்னும் விசாரிக்கவே இல்லை என்று விசாரத்த அதிகாரிகளே கூறியுள்ள நிலையில், தமிழகக் காங்கிரசார் யாருடைய குற்றத்தை மறைக்க நாடகமாடுகின்றனர்?
தமிழகக் காங்கிரஸ் கட்சியினருக்கு தைரியமிருந்தால், வக்கிருந்தால், தமதுக் கட்சித் தலைவரான இந்திராகாந்தியை சுட்டுக் கொன்றவர்களை தியாகிகளாக போற்றலாமா என்று முதலில் சீக்கிய இனத்தைச் சேர்ந்த பிரதமரிடம் கேள்வி எழுப்பிவிட்டு, அதன் நியாயங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கிப் பேசிய பின், நளினி விடுதலையைப் பற்றி பேசுங்கள். அதற்கு முன்பு நளினி விடுதலை குறித்து பேச தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் எவ்வித அருகதையும் இல்லை.

தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்

நாள்: 15.02.2010
இடம்: சென்னை-17.

0 கருத்துகள்: