ஈழத்தமிழர் ஆதரவு : மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை : இளந்தமிழர் இயக்கம் கணடனம்

Friday, March 20, 2009

ஈழத்தமிழர் ஆதரவு : கடலூர் அரசுக் கல்லூரி
மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை
இளந்தமிழர் இயக்கம் கணடனம்

 சென்னை, 20.
 
ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறிப் போரை இந்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்  30 சனவரி அன்று முதல் காலவரையற்ற உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தற்பொழுது அப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அக்கல்லூரி முதல்வர் சந்திரிகா பெற்றோர்களை அழைத்து வருமாறுக் கூறியும், சில மாணவர்களை வகுப்புக்கு செல்ல அனுமதி மறுத்தும்  பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கல்லூரி முதல்வரின் இந்நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.
 
மேலும், அரசு தான் இவ்வாறு செய்யக்கூறுகிறது என்று அம்முதல்வர் கூறுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது அரசின் முடிவா அல்லது அக்கல்லூரி முதல்வரின தனிப்பட்ட முடிவா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
 
கல்லூரி நிர்வாகம், மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து அவர்களது கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அம்மாணவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் நல்லதுரை மேற்கொண்டு வருகின்றார். 
 
தோழமையுடன்,
க.அருணபாரதி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

Read more...

காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

Monday, March 16, 2009

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம்
குறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு
இளந்தமிழர் இயக்கம் முடிவு
 
சென்னை, 17.
 
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது.
 
கடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார்.
 
தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெறும் கையெழுத்து இயக்கத்திற்கும், சேலம் இன எழுச்சி மாநாட்டிற்கும் உதவிகள் செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி முன்மொழிந்தார்.
 
ஈழத்தமிழர்களைக் கொல்வதற்காக சிங்கள அரசுக்கு ஆய்த உதவிகள் செய்த காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக குறுஞ்செய்தி தகவல் மையம் ஒன்றை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
குறுஞ்செய்தி தகவல் மையம்
 
இக்குறுஞ்செய்தி தகவல் மையத்தில் சந்தாதாரர்கள் ஆக ரூ.100 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். கட்டியவர்களின் கைபேசி எண்ணுக்கு காங்கிரசுக்கு எதிரான தகவல்கள், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காங்கரசைப் பற்றிக் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், ஈழத்தமிழர் ஆதரவு போராட்டச் செய்திகள், ஈழப்போர் குறித்த இணையதள செய்திகள் என பல செய்திகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இதில் திரட்டப்படும் நிதி பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதால் இதனை நன்கொடை என்ற பெயரில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் இணைய விரும்பும் தமிழ் உணர்வாளர்கள், 9841949462 மற்றும் 9894310997 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
தோழமையுடன்,
க.அருணபாரதி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.
 
 

Read more...

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இன எழுச்சி மாநாடு (28.02.09 - 06.03.09)

Sunday, March 15, 2009

இளந்தமிழர் இயக்கம் நடத்திய
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இன எழுச்சி மாநாடு
(28.02.09 - 06.03.09)


ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக பலிவாங்கிக் கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆய்த உதவிகளை இந்திய அரசு தனக்கே உரிய தமிழர் விரோத ஆரிய இனவெறியுடன் செய்து வருகின்றது. போரை நிறுத்து என்று தமிழகமே போராடி வரும் நிலையிலும் தமிழக சட்டமன்றம் 3 முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ள போதிலும் இந்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மாறாக சிங்கள அதிபருடனும் இராணுவத் தளபதியுடனும் நல்லுறவு பேணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கும் இந்திய அரசின் இப்போக்கைக் கண்டித்து மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் உயிராயுதம் ஏந்தி தன்னுடலை தீக்கிரையாக்கினர். தேர்தல் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனம் முத்துக்குமாரின் அறிக்கையால் இனங்காட்டப்பட்டது. முத்துக்குமாரின் எழுச்சி மிகு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தேர்தல் கட்சிகளை சாராத உணர்வுள்ள மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு இயக்கமாக செயல்படலாம் என முடிவெடுத்தோம். அதன் விளைவு தான் “இளந்தமிழர் இயக்கம்”. இவ்வியக்கத்தின் முதல் வேலைத் திட்டமாக தமிழீழ ஆதரவுப் பரப்புரைப் பயணத்தை நடத்தினோம்.

இப்பரப்புரைப் பயணத்தின் மூலம், ஊடகங்களால் மறைக்கப்பட்டுள்ள தமிழீழ மக்களின் இன்னல்களை தமிழகத்தின் கிராமங்களுக்கு சென்று விளக்கியும், இனத் துரோhகத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரசுக் கட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என 1 இலட்சம் கையெழுத்துகளை மக்களிடம் திரட்டவும் அதனை சேலத்தில் ஒரு மாநாடு நடத்தி அதில் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டது.

குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு, 25-02-09 காலை தஞ்சை கமலா திரையரங்கு அருகில் நடந்த விழாவில் பயணம் தொடக்கி வைக்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உட்பட பல தலைவர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினர். பயணத்திட்டம் இருக் குழுக்களாக பிரிக்கப்பட்டது. வட தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும், தென் தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும் திட்டமிடப்பட்டிருந்தது.

வட தமிழ்நாடு நோக்கிச் செல்லும் அணிக்கு தோழர் ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். தென் தமிழ்நாடு நோக்கிச் செல்லும் அணிக்கு இளந்தமிழர் இயக்க நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சேசுபாலன் ராஜா, வழக்கறிஞர் செபா கௌதம் ஆகியோர் தலைமை தாங்கினர். இரு குழுவினரும் சேலத்தில் மார்ச் 6 அன்று நடைபெறும் இன எழுச்சி மாநாட்டை வந்தடையும்படி வழித்தடம் திட்டமிடப்பட்டது.

வட தமிழ்நாடு அணி

தஞ்சை தொடக்க நிகழ்ச்சியிலிருந்து கிளம்பிய பயணக்குழுவினருக்கு இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் கென்னடி, கு.ராமகிரு‘;ணன், முனி மற்றும் த.தே.பொ.க. தோழர்கள் வழியனுப்பி வைத்தனர். பயணக்குழு முதலில் பாப்பாநாடு பகுதியை அடைந்தது. அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்தில் இயக்குநர் மணிவண்ணன், ஆர்;.கே.செல்வமணி, தமிழ் உணர்வாளர் காமராஜ் உள்ளிட்டோர் பயணக்குழுவினரை வரவேற்று வாழ்த்தி உரையாற்றினர். அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு மன்னார்குடியை அடைந்தது. தமிழ் உணர்வாளர் பன்னீர் செல்வம் தலைமையில் திரண்டிருந்த உணர்வாளர்கள் வரவேற்பு நல்கினர்.

பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருத்துறைப்பு+ண்டி நகரத்தை வந்தடைந்தது. த.தே.பொ.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., தே.மு.தி.க. தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் திருத்துறைப்பு+ண்டி நகரத்திலிருந்து கிளம்பிய பயணக்குழு வேதாரண்யம் பகுதியை சென்றடைந்தது. புலவர் வரதராஜன், ஆசிரியர் சிவவடிவேல், தமிழ்த் தேச தொழிற்சங்க முன்னணி தியாகராஜன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.

பின்னர் குடந்தையை நோக்கி பயணக்குழு பயணமானது. குடந்தைத் தமிழ்க் கழக தோழர்கள் சா.பேகன், சுடர், அன்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மாணவர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு, சீர்காழி நோக்கி பயணக்குழு சென்றது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த ஈகி இரவிச்சந்திரன் வீட்டிற்கு பயணக்குழுவினர் சென்று அவர்தம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். ஈகி இரவிச்சந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தியபடி பரப்புரைக் கூட்டம் நடந்தேறியது. அதன் பின்பு கொள்ளிடம், படுகை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி சிதம்பரம் நகரத்தை வந்தடைந்தது, பயணக்குழு.

த.தே.பொ.க., தமிழ் காப்பணி, தமிழக உழவர் முன்ணனி உள்ளிட்ட அமைப்புத் தோழர்கள் சிதம்பரம் நகரில் பயணக்குழுவினரை வரவேற்றனர். சிதம்பரம் நகரத்தில் சிறப்பான பொதுக்கூட்டம் நடந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு நெல்லிக்குப்பத்தை வந்தடைந்தது. மருத்துவர் சுந்தரம் தலைமையில் திரண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் நெல்லிக்குப்பத்தில் பயணக்குழுவினரை வரவேற்றனர். அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்திற்கு பின்பு பயணக்குழு விழுப்புரம் நகரத்தை நோக்க நகர்ந்தது.

தமிழ் உணர்வாளர் ஏழுமலை தலைமையில் திரண்டிருந்த பல்வேறு இயக்கத்தவர்களும் தமிழ் உணர்வாளர்களும் விழுப்புரம் வந்தடைந்த பயணக்குழுவினரை வரவேற்றனர். அங்கு நடந்த பரப்புரைக் பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருவண்ணாமலை நகரத்தை வந்தடைந்து பின்னர் ஜோலார்பேட்டை சென்றது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பா.ம.க. தோழர்கள் திரண்டிருந்து பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழுவினர் களம்பு+ர் நகரத்தை வந்தடைந்தனர். தமிழர் கழகம் தோழர் பெருமாள் தலைமையில் திரண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றினர். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குநர் வே.சேகர் எழுச்சியுரை ஆற்றினார்.

பிறகு பயணக்குழு வேலூர் வழியாக ஆம்புர் நகரத்தை வந்தடைந்தது பயணக்குழு. ம.தி.மு.க ஜீவா, சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தமிழ் உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் வாணியம்பாடியை சென்றடைந்தது பயணக்குழு. பின்னர் அங்கிருந்து ஜோலார்பேட்டை சென்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர் சோலைப் பிரியன் மற்றும் பா.ம.க. தோழர்கள் பலரும் பயணக்குழுவினரை வரவேற்று பரப்புரைக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.

பின்னர் பயணக்குழு ஓசூர் நகரத்தை வந்தடைந்தது. பயணக்குழுவை வரவேற்று தமிழர் உரிமைக் கூட்டமைப்பினர் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள், த.தே.பொ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் உரை நிகழ்த்தினர்.

பின்னர் பயணக்குழு காவிரிப்பட்டினத்தை வந்தடைந்தது. அங்கு பெ.தி.க.வினர் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு பெண்ணகரம் நகரத்தை வந்தடைந்தது. பழங்குடியினர் பாதுகாப்பு சங்க அமைப்பாளர் தோழர் நஞ்சப்பன் தலைமையில் திரண்டிருந்த தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் தர்மபுரி நகரத்தை நோக்கிக் கிளம்பியது பயணக்குழு. தர்மபுரியிலிருந்து கிளம்பி மேட்டூர், இளம்பிள்ளை, ஏற்காடு வழியாக சேலம் மாநகரத்தை வந்தடையும் வரை பல இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. பெ.தி.க. தோழர்கள் பெருமாள், டேவிட் உள்ளிட்டோர் ஏற்காடு நகரிலும் கிராமங்களிலும் பரப்புரை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தென் தமிழ்நாடு அணி

25-.02.09 அன்று தஞ்சை நகரத்தில் தொடங்கிய பயணம் பிற்பகலில் செங்கிப்பட்டியை வந்தடைந்தது. த.தே.பொ.க. செங்கிப்பட்டி நகரச் செயலாளர் குழ.பால்ராசு தலைமையில் திரண்டிருந்த த.தே.பொ.க. தோழர்கள் பயணக்குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு ஆச்சாம்பட்டி, காமாட்சிபுரம் பகுதிகளில் பரப்புரை நடத்தியது. பின்னர் தச்சங்குறிச்சி, ஆகாசங்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகள் வழியாக பரப்புரை மேற்கொண்டபடி புதுக்கோட்டை நகரத்தை வந்தடைந்தது, பயணக்குழு. புதுக்கோட்டை மாவட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தோழர் முத்துக்குமார், தமிழர் தேசிய இயக்கம் சத்தியமூர்த்தி ஆகியோர் எங்களை வரவேற்றார். வழக்கறிஞர் முத்து, பா.ம.க., உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதுக்கோட்டை பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர். நகர் என புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பயண ஊர்தி பரப்புரை மேற்கொண்டது. இரவு புதுக்கோட்டையில் பயணக்குழு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மறுநாள் 26.02.09 அன்று புதுக்கோட்டையிலிருந்து பொன்னமரவாதி, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. வழக்கறிஞர்கள் சேசுபாலன் ராஜா, செபா கௌதம் ஆகியோர் கூட்டங்களில் உரை நிகழ்த்தினர். மறுநாள் 27.02.09 அன்று ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி கோட்டைப்பட்டினம் நகரத்தை பயணக்குழு அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை தோழர்கள் மணிவண்ணன், இரும்பொறை, இராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இரவு கோட்டைப் பட்டினத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை பா.ம.க.வினர் செய்திருந்தனர்.

28.02.09 அன்று மிமீசல், தொண்டி, தேவிப்பட்டினம் பகுதிகள் வழியாக இரமேஸ்வரம் நகரத்தை பயணக்குழு அடைந்தது. வழிநெடுக பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி பயணக்குழுவினர் பயணித்தனர். ம.தி.மு.க. இளங்கோ உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்று உபசரித்தனர். மறுநாள் 01.03.09 அன்று இராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வந்தடைந்த பயணக்குழுவை த.தே.பொ.க. திருச்செந்தூர் பகுதி அமைப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையிலி திரண்டிருந்த தோழர்கள் வரவேற்றனர். பின்னர் தூத்துக்குடியில், பிரேம் நகர், காமராஜ் கல்லூரி, ஸ்பிக் நகர், பழைய காயல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், கொழுவ நல்லூர் பகுpகளில் பரப்புரை மெற்கொண்டனர். கொழுவ நல்லூரில் மாவீரன் முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்ற பயணக்குழுவினரை முத்துக்குமாரின் பாட்டி அன்புடன் வரவேற்றார். சேலம் ‘இன எழுச்சி மாநாட்டி’ற்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்துவிட்டு கிளம்பிய பயணக்குழு குறும்பு+ர் கடைத்தெருவில் பரப்புரை மேற்கொண்டது. பின்னர், திருச்செந்தூர் நகரத்தை வந்தடைந்துது. தமிழ் உணர்வாளர் தமிழ்த்தேசியன், விடுதலை சிறுத்தைகள் மாணவர் அமைப்புத் தோழர்கள் உள்ளிட்ட பல உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.
02.03.09 அன்று திருச்செந்தூர் நகரத்திலிருந்து கிளம்;பிய பரப்புரை பயணக்குழு, திருச்செந்தூர் கடை வீதி, பேருந்து நிலையம், தென் திருப்பேரை, ஆழ்வார் திருநகரி, கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதிகளில் பரப்புரை மெற்கொண்டபடி திருநெல்வேலி நகரத்தை வந்தடைந்தது. நெல்லையில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் உள்ளிட்ட தோழர்கள் எவ்வளவோ முயன்றும் நெல்லை நகரத்தில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி கொடுக்காமல் மறுத்தது. ஆகையால் நகரத்தில் பரப்புரை மேற்கொள்ளாமல் நெல்லை புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. நெல்லை நகரத்திலிருந்து கிளம்பி தென்காசி அருகில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தை வந்தடைந்தது பயணக்குழு. பயணக்குழுவினரை வரவேற்ற கிராம மக்கள் முள்ளிக்குளம் பள்ளி அருகில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். ஈழத்தமிழர் சிக்கல் குறித்த நாடகமும், பாடல் நிகழ்ச்சியும் பயணக்குழுவினரால் நடத்தப்பட்டன. வழக்கறிஞர் செபா, அருணபாரதி மற்றும் போர் நிறுத்தம் கோரி நடத்தப்பட்ட சாகும் வரை உண்ணாப் போராட்டத்தில் கலந்து கொண்ட முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த சேலம் சட்டக்கல்லூரி மாணவர் ராஜே‘; உள்ளிட்டோர் உரையாற்றினார். முள்ளிக்குளம் கிராமத்திலேயே இரவு தங்கியது பயணக்குழு.

03.04.06 அன்று முள்ளிக்குளத்திலிருந்து கிளம்பிய பயணக்குழு திருவல்லிப்புத்தூர் நகரத்தை வந்தடைந்த போது மாற்றுத் திறனுக்கான கல்வி அமைப்;ப(TEST) நடத்தி வரும் ஜோ உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி வத்திராயிருப்பு நகரத்தை வந்தடைந்தது பயணக்குழு. தமிழ் உணர்வாளர்கள் காளீசுவரன், குறிஞ்சிக்கபிலன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். வத்திராயிருப்பு சந்தை, மகாராஜபுரம், தம்பிப்பட்டி, அயன்கரிசில்குளம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடைந்தது பயணக்குழு. த.தே.பொ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆனந்தன் தலைமையில் அங்கு திரண்டிருந்த த.தே.பொ.க., ம.தி.மு.க. அமைப்புத் தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருப்பரங்குன்றம், பழங்கானத்தம், ஜான்சிராணிப் பு+ங்கா, வடக்குமாசி வீதி, மெலமாசி வீதி சந்திப்பு, கோரிப்பாளையம், தந்தி அலுவலகம், பீ.வி.குளம், கோ.புதூர், செல்லூர் 50 அடி சாலை, 60 அடி சாலை, மேல பொன்னகரம், பிரித்தானியாபும் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. கூட்டங்களில் த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் தோழர் இராசு, த.தே.வி.இ. அமைப்பாளர் தோழர் கதிர் நிலவன், பெ.தி.க. மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் மாயாண்டி, வழக்கறிஞர் பகத்சிங், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பேசினர். த.தே.பொ.க., த.தே.வி.இ., மதுரை சித்திரை தானி ஓட்டுநர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் பரப்புரைக்கான ஏற்பாடுகளை செந்திருந்தனர். இரவு மதுரையில் தங்கியது பயணக்குழு.

மறுநாள் 4.02.09 அன்று காலையில் மதுரையில் கிளம்பிய பயணக்குழு வாலாந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி நகரங்ககளைக் கடந்து தேனி நகரத்தை வந்தடைந்தது. தேனி நகரில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் திரண்டிருந்து பயணக்குழுவினருக்கு வரவேற்பு நல்கினர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு அள்ளி நகரம், பெரியக்குளம் பேருந்து நிலையம், சந்தை, தேவதானப்பட்டி, வத்தலகுண்டு, பள்ளப்பட்டி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தியது. பள்ளப்பட்டியில் மாவீரன் இரவி வீட்டிற்கு பயணக்குழுவினர் சென்றனர். இரவியின் மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் பயணக்குழுவினரை வரவேற்று உபசரித்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு அம்பையநாயக்கனூர், கொடை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி திண்டுக்கல் நகரத்தை வந்தடைந்தது. அங்கு, திண்டுக்கல் மாவட்ட பெ.தி.க. மாவட்டச் செயலாளர் தோழர் துரை.சம்பத், தாமரைச்செல்வன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். இரவு திண்டுக்கல் நகரத்தில் தங்கியது பயணக்குழு.

மறுநாள் 05.02.09 அன்று காலை கிளம்பிய பயணக்குழுவினர் திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம், அனுமந்தன் நகர் பகுதிகளில் பரப்புரை மெற்கொண்டபடி எரியோடு, கோவிலூர், குஜிலியம்பரை, பாளையம், கூடலூர், ஜெதாபி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி ஈரோட்டை அடைந்தது. சி.பி.ஐ.-எம்.எல். மாவட்டச் செயலாளர் அபிரகாம், கணேசன், தமிழர் தேசிய இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் வீரப்பன் உள்ளிட்டோர் பரப்புரைக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். ஈரோடு கொல்லம்பாளையத்தில் த.தே.பொ.க., தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரே‘; உள்ளிட்ட தோழர்கள் எங்களை வரவேற்றனர். கொல்லம்பாளையம், சூரம்பட்டி, கரங்கல்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. த.தே.பொ.க. அமைப்பாளர் இளங்கோவன், சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தின் அமைப்பாளர் இரத்தினசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் பரப்புரைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இரவு கோபிசெட்டிப்பாளைத்தை பயணக்குழு வந்தடைந்தபோது ம.தி.மு.க. வழக்கறிஞர் கந்தசாமி, த.தே.பொ.க. தோழர் இளையராஜா உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.

பயணத்தின் இறுதி நாளான 06.02.09 அன்று காலையில் கோபியில் தொடங்கிய பரப்புரை, கரட்டடிபாளையம், கோபி பேருந்து நிலையம், கவுந்தபாடி நான்கு ரோடு சந்திப்பு, பேருந்து நிலையம், கலங்கை பாளையம், குன்னத்தூர் கிடங்கு, சேவக்கவுண்டனூர், பெரியபுலியு+ர், காளிங்கராயன்பாளையம் பேருந்து நிலையம், பவானி, குமாரப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் 4ட்டங்கள் நடத்தப்பட்டு சேலம் மாநகரத்தை அடைந்தது பயணக்குழு. இக்கூட்டங்களில், ம.தி.மு.க.வைச் சார்ந்த க.த.மதியழகன், பாரதிதாசன் இலக்கிய மன்றம் க.சு.அண்ணாதுரை, திராவிடர் கழகம் அ.பாலன், கொங்கு நண்பர்கள் சங்கத் தலைவர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் சிறுத்தை வளவன், அம்பேத்கர், வழக்கறிஞர் ப.பா.மோகன், லெமூரியா கழகம் அமைப்பாளர் பார்த்திபன், வழக்கறிஞர்கள் சிவராமன், ச.பாலமுருகன், இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த எம்.பாலமுருகன், இந்திய கம்யு+னிஸ்ட் கட்சி கந்தசாமி, அகில இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சோ;ந்த திருமலை, பாலதண்டாயுதம் உள்ளிட்ட பல தலைவர்கள் பயணக்குழுவினரை வரவேற்று உரை நிகழ்த்தினர்.

இன எழுச்சி மாநாடு



சேலத்தில் மார்ச் 6 அன்று மாலை போஸ் மைதானத்தில் இன எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது.



இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கினர். இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் இராஜாராம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெ.தி.க. மாவட்டச் செயலாளர் ப.பாலு வரவேற்புரையாற்றினார்.


இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இளந்தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு பின் செல்லாமல் மாணவர்களும் இளைஞர்களும் முத்துக்குமாரின் கட்டளைக்கு ஏற்ப மாற்று அணியாக திரள வேண்டும் என்றும் உரையாற்றினார்.


ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாரின் பாட்டி, வேலூர் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். முத்துக்கமாரின் கட்டளையை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என்று முத்துக்குமாரின் பாட்டி பேசினார். சீனிவாசன் தீக்குளித்த நிகழ்வையும் அவரை நேரில் கூட பார்க்க வராத தே.மு.தி.க. தலைவர் விசயகாந்த் பற்றியும் சீனிவாசனின் மனைவி பேசினார். இளந்நதமிழர் இயக்கம் சார்பில் மாவீரன் முத்துக்குமாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு அதில் தீக்குளித்த ஈகிகள் அனைவரையும் நினைவு கூறும் வகையில் சின்னங்கள் எழுப்பப்படும் என்ற அறிவிப்பை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் நல்லதுரை வெளியிட்டார்.

இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் வழக்கறிஞர் நல்லுதுரை, ம.செந்தமிழன், வழக்கறிஞர் செபா கொளதம் உள்ளிட்டோர் பரப்புரைப் பயண அனுபவங்களையும் இனி நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்னென்ன என்பது குறித்தும் எழுச்சியுரையாற்றினர்.


காங்கிரசை ஆரிய இனவெறிக் கட்சி என்று பிரகடனப்படுத்தியும், புலிகள் மீதான தடையை நீக்கி ஈழவிடுதலைப் போரை அங்கீகரிக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மாநாட்டுத் தீர்மானங்கள் இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக படித்தனர். பலத்த கரவொலியுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் தூரன் நம்பி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர். மாநாட்டின் இறுதியில் தோழர் பிந்து சாரன் நன்றி கூறினார்.



Read more...

சேலத்தில் நடந்த ”இன எழுச்சி மாநாடு” - தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம் நிறைவு

Monday, March 9, 2009

சேலத்தில் நடந்த "இன எழுச்சி மாநாடு"
தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம் நிறைவு
 
தமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் இனத் துரோகக் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதனையும் வலியுறுத்தியும் கடந்த 25-02-09 அன்று தஞ்சையில் தொடங்கி வைக்கப்பட்டு இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் நடந்த தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம், சேலத்தில் நடந்த இன எழுச்சி மாநாட்டில் நிறைவுற்றது.
 
 சேலம் போஸ் மைதானத்தில் 06-03-09 அன்று மாலை நடந்த இம்மாநாட்டில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என திரட்டப்பட்ட 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைக்கப்பட்டன. பெரியார் தி.க.வின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு ஆரம்பமானது.
 
மாநாட்டிற்கு இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். அப்பொழுது இளந்தமிழர் இயக்கம் கட்சி சாராது தமிழ் இனத்தின் நலம் சார்ந்த மாணவர், இளைஞர் அமைப்பாகவே விளங்கும் என்றும் வருகின்ற நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என விரிவாக பிரச்சாரம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் நல்லதுரை, வழக்கறிஞர் செபா, ம.செந்தமிழன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர். அப்பொழுது அவர்கள் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் காங்கிரசுக்கு எதிராக மக்களிடம் உருவாகியுள்ள மனநிலையையும் பற்றி எடுத்துக் கூறினர்.
 
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பசுமை விகடன் எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
 
ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கி மாவீரர்களான முத்துக்குமாரின் பாட்டி மற்றும் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முத்துக்குமாரின் கட்டளை எதுவோ அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என முத்துக்குமாரின் பாட்டி கண்ணீர் உரையாற்றினார்.
 
மாநாட்டில் மாவீரன் முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என இளந்தமிழர் இயக்கம் நிர்வாகக் குழுத் தீர்மானத்தை வழக்கறிஞர் நல்லதுரை அறிவித்தார். 
 
காங்கிரசை "ஆரிய இனவெறிக் கட்சி" என்று பிரகடனம் செய்தும்,  புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி, சீமான் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் தீர்மானங்கள் இளந்தமிழர் இயக்கத் தோழர்களால் மாநாட்டில் படிக்கப்பட்டு பலத்த கரவொலிக் கிடையே நிறைவேற்றப்பட்டன.

(குறிப்பு  : மாநாடு மற்றும் பயணம் குறித்த பல வேலைகளில் சிக்குண்டதால் செய்திகள் தாமதமாக வலையேற்றப்படுகின்றன. பொறுத்தருள்க! விரைவில் மாநாட்டுத் தீர்மானங்கள், மற்றும் பயண அனுபவங்கள் குறித்த தகவல்கள் வலையேற்றப்படும்)

Read more...