ஏர்டெல் சேவைகளைப் புறக்கணிப்போம் - தமிழின உணர்வாளர்கள் சூளுரை!

Friday, June 11, 2010

ஈழத்தில் தமிழினத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அங்கு செல்பேசி சேவையை நடத்திவரும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரும் பிரகடனத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் வெளியிட்டார்.

ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் புறக்கணிக்கக் கோரும் போராட்டத்தை வலியுறுத்தி சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று(11.06.2010) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 17 இயக்கம், தமிழினப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன், ஏர்டெல் நிறுவன சேவைகளை ஏன் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதை விளக்கினார்.

“தமிழினத்தின் துயரத்தைப் பொருட்படுத்தாமல், சிங்கள இனவெறி அரசால் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு, சின்னாபின்னமாகி சிதறடிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நியாயம் தேடாமல், சிங்கள இனவெறியன் ராஜபக்சவுடன் கை குலுக்கி தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளச் சென்ற ஃபிக்கி அமைப்பின் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், அந்த அமைப்பின் தலைவராக உள்ள ராஜன் பார்த்தி மிட்டல் தலைமை செயல் அலுவலராக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி, அகண்ட அலைவரிசை, இணையத் தளத் தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

இதேபோல், சிறிலங்க சிங்கள இனவெறி அரசுடன் சேர்ந்துகொண்டு இலங்கைக்குச் சென்று வணிகம் செய்யும் நிறுவனங்கள் எதுவாயினும், அந்நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்க வேண்டும்.

ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் தமிழர்கள், அதைப் புறக்கணித்துவிட்டு வேறு சேவைக்கு மாறிட வேண்டு்ம. அதனை சக தமிழர்களிடம் கூறி, அவர்களையும் ஏர்டெல் சேவையை புறக்கணிக்குமாறு வலியுறுத்த வேண்டும்” என்று நெடுமாறன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்நதிரன், டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒரு நாட்டுடன் இணைந்து வணிகம் செய்வது மட்டுமின்றி, அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அங்கு திரைப்பட விழாவையும், வணிக மாநாட்டையும் நடத்தும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு தக்க பாடம் புகட்ட, இப்படிப்பட்ட புறக்கணிப்பு போராட்டங்கள் அவசியம் என்றார்.

ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி சேவையை புறக்கணிக்குமாறு நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்குப் பிறகும், இலங்கையில் தனது சேவையை ஏர்டெல் தொடருமானால், அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை நீக்கும் போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு கூறினார்.

தமிழர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு இந்திய பெருநிறுவனங்கள் இலாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற இதழாளர் கா.அய்யநாதன், இலங்கையில் போர் நடந்தபோதே 2008ஆம் ஆண்டில் அங்கு தனது சேல்பேசி சேவையை ஏர்டெல் துவக்க அனுமதி பெற்றதற்குக் காரணம், அது தமிழர்களுக்கு எதிரான போருக்கு சிறிலங்க அரசிற்கு நிதியுதவி செய்ததே என்று செய்தி வந்ததை சுட்டிக்காட்டினார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில், 2000வது ஆண்டில் இந்தியாவிற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு்ப பிறகு இந்திய நிறுவனங்கள் பெருமளவிற்கு இலாபமடைந்தன. அதன் பிறகு சிறிலங்காவை நோக்கி பல நிறுவனங்கள் படையெடுத்தன. அங்குள்ள வணிக வாய்ப்புகளால் உற்சாகமுற்ற இந்திய நிறுவனங்கள் சிறிலங்க அரசின் போருக்கும் மறைமுகமாக உதவின. அந்த அடிப்படையில்தான் ஏர்டெல் அங்கு தனது சேவையைத் துவங்க அனுமதி பெற்றது. அப்போதும் ஃபிக்கி அமைப்பு வணிக உறவுகளுக்கு பாலமாக இருந்தது, இப்போதும் அதுவே முன்னணியில் இருந்து செயல்படுகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்யப்படும் என்றும், கருப்பு ஜூலை தினமான 25ஆம் தேதியன்று ஏர்டெல் செல்பேசியின் சிம் கார்டுகளை உடைத்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று கூறினார்.

0 கருத்துகள்: