மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது!
Tuesday, November 23, 2010
மதுரை, 24.11.2010.
மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாருக்கு தஞ்சை செங்கிப்பட்டியில் சிலை ஒன்றை நிறுவ, கடந்த சூலை மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விழா நடத்தியது. மாவீரன் முத்துக்குமாரின் சிலையை இளந்தமிழர் இயக்கம் வடிவமைத்து வழங்கியது. இந்நிகழ்வின் போது, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதியளிக்கவில்லை.
இதையடுத்து சிலையை நிறுவ த.தே.பொ.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில், மாவீரன் முத்துக்குமார் சிலையை நிறுவுவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிலையை நிறுவக் கூடாது என அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை, த.தே.பொ.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் முறியடித்தார்.
இன்று பிற்பகலில் இவ்வாணை கிடைத்ததும், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதோடு, விரைவில் சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வெற்றி த.தே.பொ.க. மற்றும் இளந்தமிழர் இயக்கத் தோழர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, இன உணர்வாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
0 கருத்துகள்:
Post a Comment