இளங்காவன் வீடு முற்றுகை போராட்டம் அறிவிப்பு : இயக்கத்தினர் இருப்பிடங்களில் காவல்துறை திடீர் சோதனை

Wednesday, May 6, 2009

இளங்காவன் வீடு முற்றுகை போராட்டம் அறிவிப்பு
இயக்க நிர்வாகிகள் தங்கியிருந்த அறையில் காவல்துறை சோதனை
இளந்தமிழர் இயக்கம் கண்டனம்


ஈரோடு, 7.05.09.

ஈரோட்டில் நேற்று முன்தினம்(4.05.09) திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் ”காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்” என்று வேண்டுகோளுடன் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான் ”நான் பெரியாரின் கொள்கை வழிப் பேரன்” என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக 5.05.09 அன்று ஈரோடு பன்னீர் செல்வம் புங்கா அருகில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாம் தான் பெரியாரின் அதிகாரப்புர்வமான பேரன். பெரியார் சிறு வயதில் தவறு செய்த போது வேண்டுமானால் சீமான் பிறந்திருக்கலாம் என்ற பொருளில் பெரியாரை மிகவும் கீழ்த்தரமாக அவர் ஒழுக்கக் கேடானவர் என கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். பெரியாரின் அரசியல் எதிரிகள் கூட பயன்படுத்தாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கும் இளங்கோவனின் இப்பேச்சுக்கு இளந்தமிழர் இயக்கம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.

இதனையொட்டி, நேற்று மாலை ஈரோட்டில் ஒரு தனியார் விடுதியில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இன்னும் 48 மணி நேரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று இளந்தமிழர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

ஈழ விடுதலையையும், ஈழத்தமிழர் ஆதரவு தலைவர்களையும் கொச்சைப் படுத்தி பேசுவதை மட்டுமே பிழைப்பாக கொண்டு செயல்பட்டு வந்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தற்பொழுது, உலகத் தமிழர்களின் தந்தையான பெரியாரை ஈரோடு மன்னிலேயே கொச்சைப் படுத்தி பேசியியிருக்கிறார். இச்செயலை உலகத் தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இளங்கோவனின் வீடு முற்றுகையிடும் போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு நல்க வேண்டும். தந்தை பெரியார் குறித்து இளங்கோவன் பேசிய அவதூறான கருத்துகளை தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன. கலைஞர் கருணாநிதியின் மறைமுக உத்தரவின் பேரில் இந்தக் கருத்தியல் ஒடுக்குமுறை நடைபெறுகின்றது. எனவு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் இச்செய்தியை பரவலாக எடுத்துச் சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திமுக விற்கு எதிரான பரப்புரைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றது.

பெரியாரின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தி முதலாளியாக இன்று வளர்ந்து, காங்கிரசுக்கு வாக்குப் பிச்சை கேட்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எந்த முகத்துடன் இனி வாக்கு கேட்டு வருவார்? இதற்கு அவர் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு மேலாவது காங்கிரசுக்கு ஆதரவாக வாக்குக் கேட்பதை திராவிடர் கழகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் திராவிடர் கழக வரலாற்றில் அழிக்க முடியாத கறை படியும் என்று இளந்தமிழர் இயக்கம் எச்சரிக்கிறது.

தமிழக நெசவாளர் அவல நிலை குறித்த ஆய்வறிக்கை வெளியீடு

தமிழகத்தில் காஞ்சிபுரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களின் வாழ்நிலை குறித்து இளந்தமிழர் இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை இச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. செய்தியாளர்களுக்கும் அவ்வறிக்கை வழங்கப்பட்டது. பல பகுதிகளில் நெசவாளர்கள் தமது சிறுநீரகத்தை விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலையை நேரில் கண்டது எமது குழு. ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இவர்களுக்காக செய்தது என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் ஒரு தோ்தல் பிரச்சாரத் துண்டறிக்கையும் வெளியிடப்பட்டது. இத்துண்டறிக்கை பல்லாயிரக்கணக்கில் அச்சடிக்கப்பட்டு ஈரோடு உள்ளிட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதிகளில் விநியோகிக்கப்படும்.

காங்கிரசை வீழ்த்துவோம் - இணையதளம் தொடக்கம்

இச் செய்தியாளர் சந்திப்பில், ”காங்கிரசை வீழ்த்துவோம்” - ”டெபிட் காங்கிரஸ்” - www.defeatcongress.com என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள அரசுக்கு காங்கிரஸ் உதவியதற்கான ஆதாரங்கள், காங்கிரஸ் கட்சியினர் வரலாறு நெடுக தமிழினத்திற்கு செய்து வந்த துரோககங்கள், பெரியார், அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரசுக்கு எதிராக பேசிய பேச்சுகள், எழுத்துகள், காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்கள், ஊழல் நடவடிக்கைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பற்றிய செய்தி ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தத் தளத்திற்கு ஆதரவு அளித்து தகவல்கள் அளித்தும், இந்தத் தளத்தை பற்றிய செய்தியை வெளியிட்டும், இணையதளங்களில் இந்தத் தளத்தின் இணைப்பை இணைக்குமாறும் இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

”எங்கள் குடும்பத்தில் யாரும் காங்கிரசு கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்” - ஸ்டிக்கர்கள் வெளியீடு

”எங்கள் குடும்பத்தில் யாரும் காங்கிரசுக்கு வாக்களி்க்க மாட்டோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் இச்செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுக்க இளந்தமிழர் இயக்கம் இந்த ஸ்டிக்கர்களை ஆயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. உணர்வுள்ள தமிழர்கள் இந்த ஸ்டிக்கர்களை அவரவர் பகுதிகளில் படியெடுத்து கொடுத்து காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

இயக்க நிர்வாகிகள் தங்கியிருந்த அறை நள்ளிரவில் திடீர் சோதனை

இச்செய்தியாளர் சந்திப்புக்குப் பின் அச்சந்திப்பு நடந்த தனியார் விடுதியில், இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன் ஆகியோர் தங்கியிருந்த அறையை நள்ளிரவில் காவல்துறை திடீரென சோதனையிட்டனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றாலும், போராட்ட அறிவிப்பு வெளிப்பட்ட பின், நள்ளிரவு நேரத்தில் காவல்துறை நடத்திய இச்சோதனை பல சந்தேகங்களை எழுப்புகின்றது. இன்று(7.05.09) தஞ்சாவுரில் தோழர்கள் க.அருணபாரதி, ம.செந்தமிழன் ஆகியோரை தேடுவதாகக் கூறிக் கொண்டு இளந்தமிழர் இயக்க ஆதாரவாளர்களிடையே விசாரித்து வருகின்றனர். இளந்தமிழர் இயக்கம் வெளியிட்ட தீர்ப்பு எழுதுங்கள் எனும் குறுந்தகடுகளை பெருந்தொகையில் கைபற்றிவிட வேண்டும் என்று காவல்துறையினர் மும்முரம் காட்டுகின்றனர். நேற்று இரவு சம்பவத்தோடு சேர்த்து இதுவரை இளந்தமிழர் இயக்கம் தொடர்புடையை இடங்களில் இதுவரை 3 முறைகள் காவல்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. திமுக - காங்கிரஸ் கொலைவெறிக் கூட்டணிக்கு எதிரான பரப்புரை பணிகளை முடக்கிவிட முயலும் திமுக - காங்கிரஸ் கொலைவெறிக் கூட்டணியினரின் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை என்பது உறுதி.

0 கருத்துகள்: