சேலத்தில் நடந்த ”இன எழுச்சி மாநாடு” - தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம் நிறைவு

Monday, March 9, 2009

சேலத்தில் நடந்த "இன எழுச்சி மாநாடு"
தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம் நிறைவு
 
தமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் இனத் துரோகக் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதனையும் வலியுறுத்தியும் கடந்த 25-02-09 அன்று தஞ்சையில் தொடங்கி வைக்கப்பட்டு இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் நடந்த தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம், சேலத்தில் நடந்த இன எழுச்சி மாநாட்டில் நிறைவுற்றது.
 
 சேலம் போஸ் மைதானத்தில் 06-03-09 அன்று மாலை நடந்த இம்மாநாட்டில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என திரட்டப்பட்ட 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைக்கப்பட்டன. பெரியார் தி.க.வின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு ஆரம்பமானது.
 
மாநாட்டிற்கு இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். அப்பொழுது இளந்தமிழர் இயக்கம் கட்சி சாராது தமிழ் இனத்தின் நலம் சார்ந்த மாணவர், இளைஞர் அமைப்பாகவே விளங்கும் என்றும் வருகின்ற நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என விரிவாக பிரச்சாரம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் நல்லதுரை, வழக்கறிஞர் செபா, ம.செந்தமிழன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர். அப்பொழுது அவர்கள் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் காங்கிரசுக்கு எதிராக மக்களிடம் உருவாகியுள்ள மனநிலையையும் பற்றி எடுத்துக் கூறினர்.
 
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பசுமை விகடன் எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
 
ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கி மாவீரர்களான முத்துக்குமாரின் பாட்டி மற்றும் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முத்துக்குமாரின் கட்டளை எதுவோ அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என முத்துக்குமாரின் பாட்டி கண்ணீர் உரையாற்றினார்.
 
மாநாட்டில் மாவீரன் முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என இளந்தமிழர் இயக்கம் நிர்வாகக் குழுத் தீர்மானத்தை வழக்கறிஞர் நல்லதுரை அறிவித்தார். 
 
காங்கிரசை "ஆரிய இனவெறிக் கட்சி" என்று பிரகடனம் செய்தும்,  புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி, சீமான் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் தீர்மானங்கள் இளந்தமிழர் இயக்கத் தோழர்களால் மாநாட்டில் படிக்கப்பட்டு பலத்த கரவொலிக் கிடையே நிறைவேற்றப்பட்டன.

(குறிப்பு  : மாநாடு மற்றும் பயணம் குறித்த பல வேலைகளில் சிக்குண்டதால் செய்திகள் தாமதமாக வலையேற்றப்படுகின்றன. பொறுத்தருள்க! விரைவில் மாநாட்டுத் தீர்மானங்கள், மற்றும் பயண அனுபவங்கள் குறித்த தகவல்கள் வலையேற்றப்படும்)

2 கருத்துகள்:

TAMILAN March 9, 2009 at 11:02 PM  

mikka makizhchi

TAMILAN March 9, 2009 at 11:03 PM  

mikka makizhchi
saravanan
kanchipuram