வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு! -இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள்!

Saturday, December 19, 2009

கனடாவில் நடைபெற உள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


’’கனடாவில் நாளை (19 டிசம்பர்2009) நடைபெற உள்ள ’வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ மீதான வாக்கெடுப்பு வெற்றியடைய எமது வாழ்த்துகள். தமிழீழ அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. ‘தனித் தமிழீழமே தீர்வு’ என்ற தமிழரின் கொள்கையை உலகறியச் செய்த தீர்மானம் அது.


தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கான அடித்தளம், தமிழீழ மக்களின் விடுதலை வேட்கை ஆகும். தமிழீழ மக்கள், விடுதலை வேட்கைகொண்டோர் என்பதை வட்டுகோட்டைத் தீர்மானமே அரசியல் ஜனநாயக அடிப்படையில் மெய்ப்பித்தது.


இன்று, புலம் பெயர் தமிழர்கள் கைகளில்தான், ‘தமிழீழத் தாயக மீட்புப் போராட்டத்தின்’ பெரும்பங்கு உள்ளது. வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு 100 விழுக்காடு வெற்றிபெறுவதன் வழி, தமிழீழத் தேசத்தவர் இந்த உலகிற்குக் கூறும் சேதி ஒன்று உண்டு;


‘எவ்வளவு ஒடுக்குமுறைகள் எம்மீது ஏவப்பட்டாலும், எம் நிலம் வந்தேறிகளால் கூறுபோடப்பட்டாலும் எம் தேசத்தை நாங்கள் மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கையும் தெளிவும் எமக்கு உண்டு. இத்தீர்மானத்தைச் சீர்குலைக்கத் துடிக்கும் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை’- என்பதே அச்சேதி.


’திம்புக் கோட்பாட்டை முன்வைக்க வேண்டும்’ என்ற சீரழிவுக் குரல்களும் இந்த நேரத்தில் கேட்கத்தான் செய்கிறன்றன. திம்புக் கோட்பாடு என்பது தமிழீழத் தேசத்தை இந்தியாவிடமும் சிங்களர்களிடமும் அடகு வைக்கும் தீர்மானங்களை முன்வைத்தது ஆகும். தமிழீழ விடுதலைப் போர், அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிப் பாய வேண்டிய இந்நேரத்தில் திம்பு போன்ற காட்டிக்கொடுப்பு கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு, வட்டுக்கோட்டை வாக்கெடுப்பில் அனைவரும் கலந்துகொண்டு 100 விழுக்காடு வெற்றி வாக்குகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் மூன்று லட்சம் புலம் பெயர் தமிழர்கள் வாழ்கின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தமிழர் வாழும் நாடு இதுவாகும். ஆகவே, கனடாவில் நடக்கும் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு, தமிழீழ மக்களின் அரசியல் தீர்மானத்தை அடையாளப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். நார்வே, பிரான்சு ஆகிய நாடுகளில் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு மிகச் சிறப்பாக நடந்துள்ளது. கனடாவிலும் இது தொடர வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை விரும்பிகளின் விருப்பமாக உள்ளது.

க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்

0 கருத்துகள்: