இந்தியாவை நம்பினால் நம்மை யாரும் காப்பாற்றமாட்டார்கள் - இளந்தமிழர் இயக்கம்
Thursday, May 20, 2010
“இந்தியாவை நம்பினால் நம்மை யாரும் காப்பாற்றமாட்டார்கள்” என இளந்தமிழர் இயக்கம் சார்பில், இணையதளத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்த அவ்வியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் குமுதம் இதழின் இணையதளத் தொலைக்காட்சியாக, குமுதம்.காம் இதழில், “முள்ளிவாய்க்கால் முடிவல்ல... இனி என்ன செய்வோம்” என்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் விவாத மேடை நிகழ்வு ஒன்றில், இளந்தமிழர் இயக்கம் சார்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது அதனை அவர் தெரிவித்தார்.
ஈழப்போராட்டத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது, அவர் பேசியதாவது:
தமிழீழ விடுதலையாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய தமிழ்நாட்டு விடுதலையாக இருந்தாலும் சரி அதை இந்தியா என்ற ஒரு கட்டமைப்புக்கு வெளியே அல்லது இந்தியாவிற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதன் இயல்பே அது தான்.
தமிழீழ பிரச்சினையாகட்டும், தமிழ்நாட்டு தமிழர்களுக்குரிய உரிமைப் பிரச்சினைகளாகட்டும், அவை அனைத்துமே இந்தியாவுக்கு எதிரானவையாகவே இயல்பாக இருக்கின்றன. நாம் விரும்பலாம் அல்லது விரும்பாமல் போகலாம். எனவே, இந்திய எதிர்ப்பு என்பது முதன்மையான தேவை. ஏனென்றால், 1987இல் தொடங்கி 2009 வரை ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததில் இந்திய இராணுவத்திற்கு பங்கு இருப்பதை இந்தியாவே மறுக்கவில்லை. இதற்குப் பிறகும் நாம் இந்தியா தான் காப்பாற்றும் என்று பேசிக் கொண்டிருந்தால், நம்மை யாருமே காப்பாற்ற மாட்டார்கள்.
எனவே, புலம் பெயர்ந்த தமிழர்களாகட்டும் அல்லது தமிழ்நாட்டுத் தமிழர்களாகட்டும் தமிழ்த் தேசிய அரசியலில், தமிழீழ விடுதலையை முன்னெடுக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களுக்கு இந்தியாவைப் பற்றியத் தெளிவு வேண்டும். அதில் குழப்பம் கூடாது. யார் எதிரி யார் நண்பர் என்று தெரிய வேண்டும். இதுவே முதல் நிபந்தனையாக நாம் கருதுகிறோம்.
இரண்டாவது, தேர்தல் என்பது இன்றைக்கு ஒரு தொழில். அதில் ஒளிவு மறைவு தேவையில்லை. இதனை கிண்டலாகப் பேசவில்லை. அதனை ஒரு விளக்கமாகவே சொல்கிறேன். தேர்தலில் கட்சிகள் அனைத்தும் கம்பெனிகள் தான். அதில், தி.மு.க. அ.தி.மு.க. அனைத்துமே கம்பெனிகள் தான்.
என்று அவர் பேசினார்.
இவ்விவாதத்தில், சேவ் தமிழ் இயக்கத்தின் அமைப்பாளர் அருண் ஷோரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பாக தமிழ்க்குமரன், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பாக வினோத் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
(விரிவான பேட்டிக்கு காண்க: www.kumudam.com)
1 கருத்துகள்:
இளந்தமிழர் இயக்கத்தின் அனைத்து எம் சகோதராகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.சகோதரன் செந்தமிழனின் பேட்டியை கனடாவில் TVI தொலைக்காட்ச்சியினூடாக நேற்று பார்த்தேன் எல்லா சகோதரர்களும் மிகவும் உணர்வுடன் தான் உள்ளார்கள் ஆனால் செந்தமிழன் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்நது ஏனென்றால் என்னைப் போன்றவர்கள் நாங்கள் தேசியத்தோடு ஊறிப் போனவர்கள் உங்களுடைய உணர்வுக்கும் கருத்துக்கு்ம் தெளிவிற்கும் எங்களுடைய நன்றிகள். உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.ஆனால் ஒன்று மட்டும் மிகவும் வருத்தமாக இருந்தது அதாவது புலம் பெயர் தமிழராகிய நாங்கள் உங்களைப் போன்றவரை ஆதரிக்கவில்லை என்று நிச்சியமாக நீங்கள் நினைப்பது தவறு ஏனென்றால் நாங்கள் எங்கெல்லாம் யாரெல்லாம் எமது தேசியத் தலைவரையும் தேசியத்தையும் தமிழ்மக்களையும் நேசிக்கின்றார்களோ அவர்களுடன் தான் நாங்களும் நிற்போம் நிற்கின்றோம் உங்களுடைய தொடர்புகள் எங்களுக்கு இவ்வளவு கிடைக்கவில்லையே இதற்காக நாங்கள் ஏகலைவன் அண்ணாவிற்குத்தான் நன்றி கூற வேண்டும் சட்டக்கல்லூரி சகோதரனும் மிகவும் உணர்வுடன் கருத்துக்களை பகிர்ந்திருந்தார் அனைவருமே மிகவும் உணர்வுடன் பேசினார்கள்.நன்றி நன்றி
கீதா கனடா.
Post a Comment