Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம்!

Sunday, July 25, 2010

சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து செயல்படும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை புறக்கணிக்கும் போராட்டம் சென்னையில் நேற்று(25.07.2010) தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு தமிழினப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் அமைப்பாளர் இதழாளர் க.அய்யநாதன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ஐயா. பழ.நெடுமாறன் ஏர்டெல் கைபேசி சிம்கார்டு ஒன்றை உடைத்து வைத்து ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டத்தை துவக்கி வைத்தார். புறக்கணிக்கப்பட்ட ஏர்டெல் கைபேசி சிம்கார்டுகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு குவிக்கப்பட்டிருந்தன.

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், ஏர்டெல் நிறுவனத்தை நாம் புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இப்போராட்டம் ஒரு துவக்கமே என்றும் வடநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு செயல்படுவதை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வே.பாரதி, வீதி தோறும் இப்புறக்கணிப்பை நாங்கள் வலியுறுத்துவோம் என்று பேசினார்.




தொடர்ந்து, பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழக பெண்கள் செயற்களத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, இதயக்கனி இதழ் ஆசிரியர் விஜயன், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சரவணக்குமார், ஓவியர் வீரசந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு ஏர்டெல் புறக்கணிப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.


இக்கூட்டத்தின் வாயிலாக, ஏர்டெல் கைபேசி சேவைகளை புறக்கணிக்க விரும்புவோர் அந்த சிம்கார்டுகளை வரும் செப்டம்பர் 27 திலீபன் நினைவு நாளுக்குள் அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Read more...

வட இந்தியப் பொருளாதார புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவோம்!

Thursday, June 3, 2010


இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆதரவுடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது விழா நடந்தால், அதில் கலந்துகொள்ளும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் துவங்கும் என்று தமிழ் இன உணர்வாளர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நேற்று மாலை கொழும்புவிலுள்ள சுகந்ததாச அரங்கில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் (India International film Academy - IIFA) விருது வழங்கு விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்துள்ள உலக வர்த்தக மாநாடு (Global Business Conclave) நடைபெறுகிறது. மூன்றாவது நாள் பாலிவுட் நட்சத்திரங்களைக் கொண்ட கிரிக்கெட் அணிக்கும், சிறிலங்க கிரிக்கெட் அணிக்கும் இடையே ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

கொழும்புவில் நடைபெறும் இந்த விழாவை புறக்கணிக்குமாறு தமிழர் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இவ்விழாவிற்கான தூதராக பணியாற்றிவந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் விலகினார். அவருடைய மகன் அபிஷேக் பச்சன், அவருடைய மனைவி ஐய்வர்யா ராய், சாருக்கான் உள்ளிட்ட இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விழாவிற்கும், அதனை நடத்த ஆதரவளித்துவரும் ஃபிக்கி அமைப்பையும் கடுமையாக எதிர்த்துவரும் தமிழர் அமைப்புகள் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று(03.06.2010) காலை நடைபெற்றது.

மே17 இயக்கம் சார்பில் இந்த செய்தியாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இதழாளர் கா.அய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், சிறிலங்க அரசு நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்கும் திட்டத்துடன் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவும், நாளை உலக வர்த்தக மாநாடும் கொழும்புவில் நடைபெறுமானால், அந்த விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளையும், அவர்கள் நடிக்கும் திரைப்படங்களையும் தென்னகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவித்திருப்பதைப் போல, உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் வர்த்தகம் செய்யச் செல்லும் நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொழும்புவில் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை நடத்தி அதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அங்கே முதலீடு செய்து வணிகம் செய்ய முற்படுவது இலாப நோக்கை மட்டுமே கொண்டு செயல்படுவதாகும் என்றும், இதில் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) என்ன ஆனது என்று இதழாளர் க.அய்யநாதன் கேள்வி எழுப்பினர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் இழைத்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்துள்ளது என்று டப்ளினில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples Tribunal) கூறியுள்ளதையும், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தத் தவறிய சிறிலங்க அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக அந்நாட்டுப் பொருட்களுக்கு அளித்துவந்த வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையையும் சுட்டிக்காட்டிய தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், இதையெல்லாம் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அங்கு சென்று வணிகம் செய்வதிலும் இலாபம் ஈட்டுவதிலும் மட்டுமே குறியாகவுள்ள வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடு கண்டனதிற்குரியது என்று இக்கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, இன்று கொழும்புவில் ஃபிக்கி ஏற்பாடு செய்துள்ள உலக வர்த்தக மாநாடு திட்டமிட்டபடி நடைபெற்றால், ஃபிக்கியின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு செய்யுமாறு போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பொருளாதார புறக்கணிப்பு போராட்டத்தை அடுத்த வாரம் சென்னையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் வெளியிடுவார்கள் என்றும், குறிப்பாக ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ளதால், அந்த நிறுவனத்தின் செல்பேசி சேவையைப் புறக்கணிக்குமாறு அறிவிக்கப்படும் என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Read more...

இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் - இளந்தமிழர் இயக்கம்

Thursday, March 4, 2010


புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும், தமிழீழ மக்களும் இணைந்து இந்தியாவை எதிரிப் பட்டியலில் வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் என்று இளந்தமிழர் இயக்கம் கூறியுள்ளது.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும், “தமிழன் தொலைக்காட்சி”யில் கடந்த ஞாயிறன்று(29.03.2010) ஒளிபரப்பான பேட்டி ஒன்றில், இளந்தமிழர் இயக்கம் சார்பில் கருத்துரைத்த அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்நேர்காணலில் அவர் பேசியதாவது:

கேள்வி: இந்த அழிவுக்குப் பிறகு ஒரு மயான அமைதி. தமிழகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழுகின்ற இடத்திலெல்லாம் ஒரு அமைதி. இத்தனை ஆண்டுகாலம் முன்னெடுத்துச் சென்றத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற தெரியாத சூழல். விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி. இதற்குப் பிறகு இந்த இயக்கம் என்னவாகும்? இந்த இயக்கம் இதுவரைக்கும் முன்னெடுத்துச் சென்று தனித்தமிழீழம் என்ற கொள்கை என்னவாகும் என்ற கவலை உலகத் தமிழர்களிடையே இப்போது இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்த விடுதலைப் போராட்டத்திற்கு எப்பொழுதும் முற்றுப்புள்ளி கிடையாது. எங்கிருந்தாவது ஒரு பொறி கிளம்பும் அது வரலாறு. இம்மாதிரியான மயான அமைதி தெரிகின்ற சூழலில் எங்கிருந்து அந்தத் தீப்பொறி எப்படி, எப்பொழுது கிளம்பும்? ஈழத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

அருணபாரதி: அந்தத் தீப்பொறி கிளம்ப வேண்டிய இடம் தமிழ்நாடு தான். உலகத்தமிழர்களின் தாய்த் தமிழகம் இது. உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு தாய் இது. தாய் தான் கதறி அழ வேண்டும். அங்கு 35,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு மிகப்பெரும் படுகொலையை, இனப்படுகொலையை இந்த இனம் சந்தித்திருக்கிறது. அதற்கான நீதியை கேட்க வேண்டிய தமிழீழ மக்கள் இப்பொழுது அகதிகளாக அங்கு இருக்கிறார்கள். அவர்கள் கேட்கவில்லை என்றாலும், அதற்கான நீதியை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அந்த நீதியைக் கேட்டாக வேண்டும்.

இது ஒரு ஆழ்கடல் அமைதி. இது மயான அமைதியல்ல. சுனாமி வருவதற்கு முன்னாலும், அந்தக் கடல் அவ்வளவு அமைதியாக இருக்கும். பின்வாங்கும். அது பின்வாங்கியப் பிறகு தான் ஒரு மிகப்பெரும் சுனாமியாக வந்து ஊரையே அழித்துவிடும். அம்மாதிரியான ஒரு பின்வாங்கல் இது. தற்காலிக பின்னடைவு இது. இதை வைத்து எல்லாம் முடிந்து விட்டது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. இதிலிருந்து எல்லாம் ஒரு புதிய திசையில் தொடங்கியுள்ளன என்று நாம் கூறலாம்.

இன்று ஈழம் பற்றிய பேச்சை தமிழர்கள் நாம் மட்டும் பேசவில்லை. உலகம் பேச ஆரம்பித்துள்ளது. உலகத்திலுள்ள பல நாடுகள் பேசியுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு, இலண்டனில் உலகத் தமிழர் பேரவை மாநாடு ஒன்று நடத்தினர். அம்மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கலந்து கொண்டிருக்கிறார். இவையெல்லாம் மிகப்பெரும் நடவடிக்கைகள். புலம் பெயர் மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு அவர்களுடைய கோரிக்கையை தெளிவாக புரிய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான நடவடிக்கையை தமிழ்நாட்டிலும் நாங்கள் மேற்கொள்வோம். இலங்கைத் தமிழ் மக்களின் படுகொலையை மக்களிடம் சேர்ப்போம். இப்படி சேர்த்தால் தான் தமிழ்நாட்டிலும் ஒரு எழுச்சி வரும்.

முத்துக்குமார் தொடக்கி வைத்த எழுச்சி, “போரை நிறுத்துங்கள். இந்திய அரசு தான் உங்களுக்கு எதிரி” என்று சொல்லி விட்டது, முத்துக்குமாரின் தியாகம். தமிழ்நாட்டில் புதிதாக நாம் என்ன போராட வேண்டும் என்றால், இந்திய அரசை எதிரியாக வைத்து தமிழீழத்திற்கான நியாயத்தைக் கேட்க வேண்டும். அந்த நியாயத்தைக் கேட்பதற்கான ஒரு போராட்டம், ஒரு கிளர்ச்சி. எதிரிகள் இதற்கு பல பெயர்கள் சூட்டுவார்கள். நாம் நியாயம் கேட்டாலே, அந்தக் கதறலை பார்த்துக் கூட அவர்களுக்கு உதறல் வரும். நாம் நியாயம் கேட்டாலே அவர்கள் பயப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு காலத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வகையில் தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர்ந்த மக்களும், தமிழீழ மக்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தின் மூலம் ஈழத்தை நிச்சயமாக அமைக்க முடியும். நம் காலத்திலேயே ஈழத்தை நாம் காண முடியும்.
இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.


நேர்காணலை முழுமையாகக் காண இங்கு சொடுக்குங்கள்.



Read more...