முத்துக்குமார் சிலை திறக்க தடை: உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கண்டனம்!

Tuesday, May 18, 2010



மாவீரன் முத்துக்குமார் சிலை திறக்க தமிழகக் காவல்துறை தடை விதித்ததற்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.

சிங்கள - இந்திய இனவெறி அரசுகளின் தமிழின அழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, 30,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்று குவித்ததை நினைவுகூறும் வகையில், இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கக் கூட்டத்தையும் 16.05.2010 அன்று நடத்தத் திட்டமிட்டன.

அதன்படி, 16.05.2010 அன்று நிகழ்வுகள் நடக்க அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கும், மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் நிகழ்வுக்கும் காவல்துறையினர் தடை விதித்தனர்.

இதற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நெட் இணையதளம் இது குறித்த செய்தியை தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.



இது தொடர்பாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்:

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக்கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தஞ்சைக்கு அருகில் உள்ள செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி செய்து அதற்காகக் காவல்துறையின் அனுமதியையும் பெற்றிருந்தது. ஆனால் விழா அன்று அற்பக் காரணங்களைக் கூறி சிலையைத் திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் போன்ற பலவற்றில் தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிலைவைப்பதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால் வேண்டுமென்றேத் திட்டமிட்டு முத்துக்குமார் போன்ற தியாக சீலர்களுக்கு சிலை நிறுவுவதைத் தடுக்க தமிழக அரசு முயற்சி செய்வது முத்துக்குமாரின் தியாகத்தை அவமதிப்பதாகும்.

தமிழருக்காகத் தன்னையே அர்ப்பணித்த முத்துக்குமாரின் சிலையை நிறுவுவதற்குரிய தடையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, நேற்று நடந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் பேசும் போது, முத்துக்குமாரின் சிலையை தடுத்த முதலமைச்சர் கருணாநிதி ராஜபக்சேவைவிட கொடியவர் என கண்டனம் தெரிவித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த செய்தி:


1 கருத்துகள்:

http://www.livestream.com/naamtamilar May 18, 2010 at 4:40 AM  

http://www.livestream.com/naamtamilar