Showing posts with label அவசர அறிக்கை. Show all posts
Showing posts with label அவசர அறிக்கை. Show all posts

தி.மு.கவினர் வெறியாட்டம்: இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி தாக்கப்பட்டார்!

Tuesday, August 10, 2010

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி தாக்கப்பட்டார்!
தி.மு.கவினர் வெறியாட்டம்!

சென்னை, 11.08.2010.

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட மூன்று தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் அலுவலகம் அமைந்திருந்த சென்னை தியாகராயர் நகர் பகுதியில் பத்திரிக்கை ஊழியர்கள் இருவர் பத்திரிக்கையின் சுவரொட்டிகளை ஒட்ட, தோழர் அருணபாரதி உடன் சென்றிருந்தார்.

அந்தச் சுவரொட்டிகளில் ‘செம்மொழி மாநாடு செய்தது என்ன?’’, ‘இந்தியாவே வெளியேறு’ ஆகிய பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த கட்டுரையின் தலைப்புகள் இருந்தன. அப்போது, அங்கு திடீரென வந்த தி.மு.கவினர், ‘தலைவர் கலைஞரின் செம்மொழி மாநாட்டைக் குறை சொல்ல நீங்க யாரு?’ என்று கேள்வி எழுப்பியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் வம்பு வளர்த்தனர். தோழர் க.அருணபாரதி அவர்களிடம் பதில் கூற முற்பட்டபோது, தோழா;கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை தூக்கி வீசி சேதப்படுத்தினர். பின்னர் தோழர்கள் நாகராஜ், பாலா ஆகியோரைத் தாக்கியுள்ளனர். தோழர் நாகராஜ் திருப்பித் தாக்க முற்பட்டபோது, அருகே இருந்த மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்த தி.மு.கவினரில் ஒருவர் அவரை வெட்ட முற்பட்டார். தோழர் அருணபாரதி குறுக்கே புகுந்து அவரைத் தள்ளிவிட்டு தோழர் நாகராஜைக் கொலைவெறித் தாக்குதலில் இருந்து காத்தார்.

இதனால் கோபமுற்ற தி.மு.கவினர், தோழர் அருணபாரதியையும் தாக்கினர். தாக்கிய பின் அக்கும்பல், தமிழர் கண்ணோட்டம் சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதியை விமர்சித்தால் கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர். அங்கிருந்து தப்பி வந்த தோழர்கள் மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர், முதலில் புகாரை ஏற்பதில் தயக்கம் காட்டினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் உடனடியாகத் தலையிட்டு மேற்கு மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் திரு. விஸ்வநாத் ஜெயன் அவர்களிடம் பேசிய பின்னர், புகார் பதிவு செய்யப்பட்டது.

மாற்றுக் கருத்துக் கொண்டோர் மீது தாக்குதல் நடத்துவது தி.மு.கவின் வழக்கமாக உள்ளது. தமிழர் கண்ணோட்டம் இதழும் இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசிய அரசியலில் சமரசமின்றிப் போராடி வருகின்றன. குறிப்பாக தி.மு.க தலைவர் கருணாநிதியின் தமிழின விரோத நடவடிக்கைகளை எதிர்த்துக் களம் கண்டு வருகின்றன. இதைச் சகித்துக் கொள்ள முடியாத தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகள் தி.மு.கவின் தமிழின விரோதப் போக்கை மேலும் அம்பலப்படுத்துமே தவிர, தமிழினத்தில் அக்கட்சிக்கு நற்பெயர் கிடைக்க வழிவகுக்கப் போவதில்லை.

தாக்குதல் நடத்திய கொலை வெறியர்களைத் தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தி.மு.க தலைமை இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்.

இதுபோன்ற போக்கை தி.மு.கவினர் நிறுத்த வேண்டும். இதுகுறித்த தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு தி.மு.கவின் தமிழின விரோத அடியாள் அரசியலை அம்பலப்படுத்தும் பணியை இளந்தமிழர் இயக்கம் முன்னெடுக்க உள்ளது. உலகெங்கும் வாழும் இன உணர்வாளர்கள் இப்பணியில் இளந்தமிழர் இயக்கத்துக்குத் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
ம.செந்தமிழன்
தலைமைக் குழு - இளந்தமிழர் இயக்கம்

Read more...

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு அவசர வேண்டுகோள்!

Wednesday, May 5, 2010


மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு
மலேசிய தடுப்புக் காவலில் தவிக்கும் 75 ஈழஅகதிகளின்
ஒலிவடிவ கோரிக்கை
இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!

இலங்கைத் தீவில் வாழ வழியின்றி, அத்தீவைவிட்டு வெளியேறி மலேசியாவிற்கு, அகதிகளாகச் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 ஈழத்தமிழர்கள், மலேசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு கோலாலம்பு+ர் விமான நிலையத்தின், குடியேற்றத் துறையினருக்குச் சொந்தமான இடத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 25.04.2010 அன்று, இளந்தமிழர் இயக்கத்தின் முன்முயற்சியால், சென்னையில் உள்ள மலேசியத் துணைத் தூதருக்கு, பல்வேறு தமிழ் உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கோரிக்கை மனு ஒன்றும் அளிக்கப்பட்டிருந்தது. அம்மனுவில், தஞ்சமடைந்த அகதிகளை மலேசிய நாட்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விதிகளின்படி அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதே நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் மலேசியத் துணைத் தூதரிடம் மனு அளித்துள்ளன.

இந்நிலையில், மலேசிய அரசு தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களை அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள மறுத்துள்ளதுடன், அவர்களை கோலாலம்பு+ர் விமான நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. தடுப்புக் காவலில் உள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழர்கள் சார்பில், அகதிகளாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை மனு ஒன்றை எழுத்து வடிவில் பெறும் நோக்கில் பல்வேறு கட்ட முயற்சிகளை இளந்தமிழர் இயக்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அவசரச் சூழலைக் கருதி அம்மக்களின் ஒலி வடிவ கோரிக்கையை இளந்தமிழர் இயக்கம் பெற்றுள்ளது. அதனை இவ்வறிக்கையுடன் யாம் வெளியிடுகின்றோம்.



மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களுக்கு மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழ் அகதிகள் சார்பில் விடுக்கப்படும், இந்த அவசர ஒலி வடிவக் கோரிக்கையை, உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவில் முயன்று தமிழக அரசிடம் கொண்டு சேர்த்து, ஈழஅகதிகளின் கோரிக்கையை உலகறியச் செய்திட முன்வருமாறும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

இந்த ஒலி வடிவக் கோரிக்கையை தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் இளந்தமிழர் இயக்கம் அனுப்பி வைக்கிறது. இந்த ஒலி வடிவ வேண்டுகோளை ஏற்று, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்கள் 75 பேரையும் தமிழகத்தில் அகதிகளாகப் பதிவு செய்து கொள்ளும் நோக்கிலான முயற்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

நன்றி!

தோழமையுடன்,
க.அருணபாரதி

| ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம் |

இடம் : சென்னை-17.
நாள் : 05.05.2010

Read more...

சென்னையில் உள்ள உணர்வாளர்களுக்கு அவசர வேண்டுகோள்!

Saturday, April 24, 2010


மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப அவ்வரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டாம் என்பதை வலியுறுத்தி, சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்திடம் மனு கொடுக்க, இன்று காலை 11.30 மணியளவில் செல்லவுள்ளோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், உள்ளிட்ட தமிழ் அமைப்புத் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள முன் வந்துள்ளனர்.

சென்னையில் உள்ள உணர்வாளர்கள் லயோலா கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள மலேசியத் தூதரகம் முன்பு, முன்கூட்டியே வந்திருந்து அம்மனுவில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

பேச: 9841949462

Read more...