மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு அவசர வேண்டுகோள்!
Wednesday, May 5, 2010
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு
மலேசிய தடுப்புக் காவலில் தவிக்கும் 75 ஈழஅகதிகளின்
ஒலிவடிவ கோரிக்கை
இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!
இலங்கைத் தீவில் வாழ வழியின்றி, அத்தீவைவிட்டு வெளியேறி மலேசியாவிற்கு, அகதிகளாகச் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 ஈழத்தமிழர்கள், மலேசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு கோலாலம்பு+ர் விமான நிலையத்தின், குடியேற்றத் துறையினருக்குச் சொந்தமான இடத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த 25.04.2010 அன்று, இளந்தமிழர் இயக்கத்தின் முன்முயற்சியால், சென்னையில் உள்ள மலேசியத் துணைத் தூதருக்கு, பல்வேறு தமிழ் உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கோரிக்கை மனு ஒன்றும் அளிக்கப்பட்டிருந்தது. அம்மனுவில், தஞ்சமடைந்த அகதிகளை மலேசிய நாட்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விதிகளின்படி அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதே நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் மலேசியத் துணைத் தூதரிடம் மனு அளித்துள்ளன.
இந்நிலையில், மலேசிய அரசு தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களை அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள மறுத்துள்ளதுடன், அவர்களை கோலாலம்பு+ர் விமான நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. தடுப்புக் காவலில் உள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழர்கள் சார்பில், அகதிகளாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை மனு ஒன்றை எழுத்து வடிவில் பெறும் நோக்கில் பல்வேறு கட்ட முயற்சிகளை இளந்தமிழர் இயக்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அவசரச் சூழலைக் கருதி அம்மக்களின் ஒலி வடிவ கோரிக்கையை இளந்தமிழர் இயக்கம் பெற்றுள்ளது. அதனை இவ்வறிக்கையுடன் யாம் வெளியிடுகின்றோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களுக்கு மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழ் அகதிகள் சார்பில் விடுக்கப்படும், இந்த அவசர ஒலி வடிவக் கோரிக்கையை, உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவில் முயன்று தமிழக அரசிடம் கொண்டு சேர்த்து, ஈழஅகதிகளின் கோரிக்கையை உலகறியச் செய்திட முன்வருமாறும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
இந்த ஒலி வடிவக் கோரிக்கையை தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் இளந்தமிழர் இயக்கம் அனுப்பி வைக்கிறது. இந்த ஒலி வடிவ வேண்டுகோளை ஏற்று, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்கள் 75 பேரையும் தமிழகத்தில் அகதிகளாகப் பதிவு செய்து கொள்ளும் நோக்கிலான முயற்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
நன்றி!
தோழமையுடன்,
க.அருணபாரதி
| ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம் |
இடம் : சென்னை-17.
நாள் : 05.05.2010
1 கருத்துகள்:
யாரை கேட்பதென்ற விவஸ்தை இல்லையா? உங்களுக்கு.... இந்த மூதி கருணாநிதியால்த் தான் நம் தமிழினம் கெட்டு நொந்து கிடக்கின்றது...
இந்த நாதாரி கருணையால் விடுதலை பெறுவதை விட செத்தொழிந்து போவது எவ்வளவோமேல்...
Post a Comment