தஞ்சையில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட மாவீரன் முத்துக்குமார் சிலை!
Monday, January 31, 2011
ஈழத்தமிழர் மீதான சிங்கள இந்திய கூட்டுப்படை நடத்திய இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்தக் கோரி தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமாருக்கு, அவர் உயிர் துறந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29.01.2011 அன்று தஞ்சையில் மார்பளவு சிலை எழுச்சியுடன் திறக்கப்பட்டது.. இதில் திரளான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈகி முத்துக்குமாருக்கு முதன் முதலாக சிலை வைக்கும் பணியை, அவரது இறப்புக்குப் பின் உருவான இளந்தமிழர் இயக்கம் கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில் அறிவித்து அதற்காக, உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களின் பங்களிப்போடு மாவீரன் முத்துக்குமாரின் மார்பளவு சிலையை உருவாக்கியது.
அச்சிலையை, தஞ்சையில் தமிழ் உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர் அவர்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு கொடையாக அளித்த நிலத்தில் அதனைத் திறக்கவும் த.தே.பொ.க. ஏற்பாடுகளை செய்திருந்தது. எனினும்இ 2011 மே 16 அன்று நடக்கவிருந்த, சிலை திறப்பு நிகழ்வில் சிலையை திறக்கக் கூடாது என தஞ்சை மாவட்டக் காவல்துறை தடை விதித்தது. தமிழ் உணர்வாளர்களுக்குக் கொந்தளிப்பை அளித்த அத்தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அப்போது அறிவித்தார்.
அவரது அறிவிப்பின்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அத்தடையை நீக்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் அதிகார அத்துமீறலையும் நீதிபதி தனது தீர்ப்பில் கண்டித்தார். இத்தீர்ப்பையடுத்து தான், திட்டமிட்டபடி மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வு 29.01.2011 அன்று நடைபெற்றது.
சிலை திறப்பு நிகழ்வையொட்டி தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் சுடரோட்டம் பிற்பகல் 2 மணிக்கு திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தொடங்கி சாணூரப்பட்டி வரை நடந்தது. இச்சுடரோட்டத்தை தமிழக இளைஞர் முன்னணியின் புதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் க.செந்திறல், புதலூர் ஒன்றியப் பொருளாளர் தோழர் க.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.இ.மு. தஞ்சை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இரெ.சிவராசு சுடரோட்டத்தைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகினர்.
இதைத்தொடர்ந்து சாணூரப்பட்டி திருச.;சி-தங்சை நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த மதவீரன் முத்துக்குமார் சிலையை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் திறந்து வைத்தார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. குழ.பால்ராசு நிகழ்வுக்கு தலைமை ஏற்றார். "முத்துக்குமாருக்கு வீரவணக்கம்" என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
சிலை திறப்பிற்கு பின், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. கி.வெங்கட்ராமன் உரையாற்றினார். "மாவீரன் முத்துக்குமார் சுட்டிக்காட்டியபடி இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்து தமிழினத்தை மீட்போம் என்று இந்நதாளில் நாம் உறுதியேற்க வேண்டும்" என்று அவர் கூறினார். முத்துக்குமாரின் தந்தை திரு. குமரேசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
சிலை திறப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்ட விழா மேடைக்கு, உணர்வாளர்கள் பேரணியாக சென்றனர். பேரணியில் திரு. இரா.ரெங்கராசன் அவர்களின் தஞ்சை வீரசோழக் கிராமியக் குழுவினரின் தப்பாட்டம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலையில் தொடங்கிய பொதுக் கூட்டத்தின் தோழர் தேவேந்திரன் குழுவினர் நடத்திய "மாவீரன் முத்துக்குமார் மரண வாக்குமூலம்" நாடகம் நடந்தது. இதில் முத்துக்குமார் உயிர் விட்ட கடைசி தருணங்களை நாடகமாக நிகழ்த்திக் காட்டினர்.
இதன்பின், "எரிதழல் ஏந்தி வா!" என்ற தலைப்பில் நடந்த பாவீச்சில், கவிஞர்கள் கவிபாஸ்கர், கவித்துவன், ஓசூர் இரா.சு.நடவரசன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
அதன்பின் தொடங்கிய, பொதுக்கூட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார். சிலையை நிறுவ நிலம் வழங்கிய புலவர் இரத்தினவேலவன், ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு. ச.குமரேசன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆ.சண்முகம், கு.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ.கருணாநிதி வரவேற்புரையாற்றpனார்.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, இளங்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர். நிறைவில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
அவர் பேசுகையில்,
"அய்யா காசி ஆனந்தன் அவர்கள் பேசியது போல், முத்துக்குமார் இன விடுதலைப் போராளியே. அதனால், மாவீரன் முத்துக்குமாரின் நினைவு நாளை இனி இன விடுதலை நாள் என்று கொண்டாடினாலும் தகும்.
மாவீரன் முத்துக்குமாரும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனும் காட்டியப் பாதை தேர்தல் பாதை அல்ல. அது புரட்சிப் பாதை. அதை நாம் உணர வேண்டும். அதை விடுத்து, தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும், மாவீரன் முத்துக்குமார் படத்தையும் ஏந்திக் கொண்டு யாராவது வாக்குப் பிச்சைக் கேட்டு வந்தால் அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் தமிழினத்திற்கு துரோகம் செய்பவர்கள். அவர்களது படங்களைக் கொண்டு வாக்குப்பிச்சை கேட்டால் அது பிக்பாக்கெட் அடிப்பதற்கு சமம்." என்றார்.
சிலை திறப்பு நிகழ்வுக்கு தமிழகமெங்குமிருந்து த.தே.பொ.க. தோழர்கள் பேருந்துகளிலும், மகிழ்ந்து வாகனங்களிலும் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக, த.தே.பொ.க. புதலூர் ஒன்றியச் செயலார் தோழர் கெ.செந்தில்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.