வட இந்தியப் பொருளாதார புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவோம்!

Thursday, June 3, 2010


இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆதரவுடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது விழா நடந்தால், அதில் கலந்துகொள்ளும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் துவங்கும் என்று தமிழ் இன உணர்வாளர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நேற்று மாலை கொழும்புவிலுள்ள சுகந்ததாச அரங்கில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் (India International film Academy - IIFA) விருது வழங்கு விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்துள்ள உலக வர்த்தக மாநாடு (Global Business Conclave) நடைபெறுகிறது. மூன்றாவது நாள் பாலிவுட் நட்சத்திரங்களைக் கொண்ட கிரிக்கெட் அணிக்கும், சிறிலங்க கிரிக்கெட் அணிக்கும் இடையே ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

கொழும்புவில் நடைபெறும் இந்த விழாவை புறக்கணிக்குமாறு தமிழர் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இவ்விழாவிற்கான தூதராக பணியாற்றிவந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் விலகினார். அவருடைய மகன் அபிஷேக் பச்சன், அவருடைய மனைவி ஐய்வர்யா ராய், சாருக்கான் உள்ளிட்ட இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விழாவிற்கும், அதனை நடத்த ஆதரவளித்துவரும் ஃபிக்கி அமைப்பையும் கடுமையாக எதிர்த்துவரும் தமிழர் அமைப்புகள் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று(03.06.2010) காலை நடைபெற்றது.

மே17 இயக்கம் சார்பில் இந்த செய்தியாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இதழாளர் கா.அய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், சிறிலங்க அரசு நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்கும் திட்டத்துடன் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவும், நாளை உலக வர்த்தக மாநாடும் கொழும்புவில் நடைபெறுமானால், அந்த விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளையும், அவர்கள் நடிக்கும் திரைப்படங்களையும் தென்னகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவித்திருப்பதைப் போல, உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் வர்த்தகம் செய்யச் செல்லும் நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொழும்புவில் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை நடத்தி அதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அங்கே முதலீடு செய்து வணிகம் செய்ய முற்படுவது இலாப நோக்கை மட்டுமே கொண்டு செயல்படுவதாகும் என்றும், இதில் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) என்ன ஆனது என்று இதழாளர் க.அய்யநாதன் கேள்வி எழுப்பினர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் இழைத்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்துள்ளது என்று டப்ளினில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples Tribunal) கூறியுள்ளதையும், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தத் தவறிய சிறிலங்க அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக அந்நாட்டுப் பொருட்களுக்கு அளித்துவந்த வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையையும் சுட்டிக்காட்டிய தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், இதையெல்லாம் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அங்கு சென்று வணிகம் செய்வதிலும் இலாபம் ஈட்டுவதிலும் மட்டுமே குறியாகவுள்ள வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடு கண்டனதிற்குரியது என்று இக்கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, இன்று கொழும்புவில் ஃபிக்கி ஏற்பாடு செய்துள்ள உலக வர்த்தக மாநாடு திட்டமிட்டபடி நடைபெற்றால், ஃபிக்கியின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு செய்யுமாறு போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பொருளாதார புறக்கணிப்பு போராட்டத்தை அடுத்த வாரம் சென்னையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் வெளியிடுவார்கள் என்றும், குறிப்பாக ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ளதால், அந்த நிறுவனத்தின் செல்பேசி சேவையைப் புறக்கணிக்குமாறு அறிவிக்கப்படும் என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

2 கருத்துகள்:

Thennavan June 3, 2010 at 10:14 PM  

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் விழாவில் கலந்து கொள்ளும் திரை நட்சத்திரங்களை பயன்படுத்தி எடுக்கப்படும் விளம்பர பொருட்களை தவிர்ப்போம் .
இனியாவது விழித்துக்கொள்வோம்.
எதிரி யார் என்று தெரிந்துகொள்வோம்.
புறக்கணிப்போம் துரோகிகளை .
விசிலடிச்சான் குஞ்சுகளே இனியாவது
இன உணர்வு கொள் .

pmk2k7 July 12, 2010 at 1:04 AM  

இனம் ஒன்று என்பதை
காட்ட
அனைத்து தமிழரும்
ஒன்றாக இருப்போம்