மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

Monday, May 10, 2010

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு
நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம்.

இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்!





வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயினில் உருவாகி, எம் இன விடுதலைக்கு அயராது பாடுபடும் இளந்தமிழர் இயக்கத்திற்கு நோர்வே ஈழத் தமிழர் அவையின் வணக்கம்.

வரலாற்றின் ஆதி காலம் முதல் இன்று வரை மொழி, இன, பண்பாட்டால் தமிழகமும் தமிழீழமும் ஒன்றென வாழ்ந்து வந்தாலும், முத்துகுமாரின் உயிர் தியாகம் நம் உறவின் மேன்மைக்கு புதியதோர் அத்தியாத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வீர இளைஞனுக்கு இளந்தமிழர் இயக்கம் நினைவு சின்னம் எழுப்புவதை முன்னிட்டு, நோர்வே ஈழத் தமிழர் அவை பெரு மகிழ்ச்சி அடைவதுடன், தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வன்னிப் போரின் பொழுதும் இன்றும் இளந்தமிழர் இயக்கத்தின் சீர்மிகு வரலாற்றுக் கடமையினை நோர்வே ஈழத் தமிழர் அவை அறிந்தே வைத்துள்ளது.

எம் மாவீரர்களின் தியாகத்தால் தணல் விட்டு எரியும் விடுதலை தாகம், தமிழக மக்களின் உறுதுணையுடன் தான் விடை காணும் என்பதில் எமக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. எம் இலட்சிய தீயை அணையாமல் எடுத்து சென்றிட யாம் புதிதாக அரசியல் வழிப் போராட்டத்தை முன்னெடுத்து உலகின் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளோம். எம் வரலாற்றில் முதல் முறையாக புலம் பெயர்ந்த தேசத்தில் வாழும் மக்களின் ஆணையை வாக்கெடுப்பின் மூலம் பெற்று பலம் மிக்க அமைப்பாக நோர்வே ஈழத் தமிழர் அவை செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலாக்கத்தைப் பற்றி எம் தமிழக உறவுகளிடையே எடுத்தியம்பி எம் விடுதலைக்கு வலு சேர்க்க இவ்வேளையில் வேண்டிநிற்கிறோம்.

மேலும், எம் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ்த் தேசிய சிந்தனையின் விதியினை விதைப்பது நம் போன்றோரின் கடமை என்பதனையும், கடல் கடந்து வாழ்ந்தாலும் எம் கைகள் ஒன்று சேர்ந்தால் பல பணிகளை நாம் செய்யலாம் என்பதனையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.
இவ்வாறு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளந்தமிழர் இயக்கம் நன்றி

நோர்வே ஈழத்தமிழர் அவையின் வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமது கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போன்று தொடர்ந்து இன விடுதலைக்காக இணைந்து செயல்படுவோம் என்றும் நாம் உறுதியளிக்கிறோம்.

குமுதம் ரிப்போhட்டரில் சிலை திறப்பு நிகழ்வு குறித்த செய்தி

தமிழகத்திலிருந்து வெளியாகும் பிரபல செய்தி வார இதழான 'குமுதம் ரிப்போர்ட்டர்” ஏடு, முத்துக்குமார் சிலை தொடர்பாக இவ்வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.


சிலை திறப்பு நிகழ்வு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்ட நிகழ்வையும் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட, மீனகம்.காம் இணையதளத்தினர் முன் வந்துள்ளனர். அவர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்களிப்பு செய்ய விரும்புவோர்க்கு...

மாவீரன் முத்துக்குமார் சிலையில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இன உணர்வாளர்கள் தமது பங்களிப்புகளை 14.05.2010 மாலைக்குள் அனுப்பி வைக்கமாறு அன்புடன் வேண்டுக் கேட்டுக் கொள்கிறோம். இதற்குரிய வங்கிக் கணக்கு எண் விபரத்தையும் யாம் இங்கு வெளியிடுகின்றோம்.

வங்கிக் கணக்கு விவரங்கள்: 

தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழர் இயக்கம்
Cell : +91 9841949462

0 கருத்துகள்: