இளங்கோவன் வீடு முற்றுகை: இளந்தமிழர் இயக்கத்தினர் பிணையில் விடுதலை

Thursday, May 21, 2009

இளங்கோவன் வீடு முற்றுகை:

இளந்தமிழர் இயக்கத்தினர் பிணையில் விடுதலை
21.05.09, ஈரோடு.





தந்தை பெரியார அவமதித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு 5.5.09 அன்று ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் போராட்டம் நடத்தியது. ஈரோடு பன்னீர் செல்வம் புங்காவில் தொடங்கவிருந்த முற்றுகை ஊர்வலம் புறப்படும் முன்பாகவே திடீரென இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஈரோடு மாவட்டச் செயலாளர் வெ.இளங்கோவன் உட்பட முன்னணி தோழர்கள் 10 பேரை காவல்துறை முதலில் கைது செய்தனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்று அனுமதி மறுத்தது காவல்துறை. பின்னர் வெவ்வேறு அணிகளாக போராட்டத்தைத் தொடர்ந்த சமர்ப்பா குமரன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் செல்வராசு, தாயம்மாள், பரமேசுவரன் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது எண்ணிக்கையை குறைவாக காட்ட வேண்டும் என்ற நோக்கில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பலரை அச்சுறுத்தி கைது செய்யாமல் விரட்டி விட்டனர். கைது செய்யப்பட்டத் தோழர்கள் 3 இடங்களில் தனித்தனியாக சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடைசி அணியாக கைது செய்யப்பட்ட 18 பேரை விடுவித்துவிட்டு மிதம் உள்ள 28 பேர் மீது ஐ.பி.சி. 143, 153, 188 IPC R/W 7(1)a
CLA Act, 12 of Press and Registration of Books Act 1867, 3-A of Tamilnadu Open Places Prevention of Disfigurement) act 1959 உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அன்றிரவே கோவை நடுவண் சிறையில் அடைத்தது காவல்துறை. மேலும் இப்போராட்டம் காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு துணை இராணுவம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.







ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் நடத்தி வரும் பிரச்சாரத்தை மனதில் வைத்துக் கொண்டே இயக்கத்தின் முன்னணித் தோழர்களை காங்கிரஸ் - திமுக அரசு கைது செய்தது. இந்நிலையில் 11.05.09 அன்று கைது செய்யப்பட்ட
தோழர்களை பிணையில் விடுதலை செய்யக் கோரி ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப.பா.மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 15.05.09 அன்று கைது செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒருநபர் ஜாமீன் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.

தோழர்களை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் நீதிபதிகளுக்கு தந்திகள் கொடுத்தும், பிணைதாரர்கள் மீது சந்தேகங்கள் எழுப்பி நாட்களை இழுத்தடிப்பதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்த போதும், இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் நீதிபதி பிணை வழங்கினார். பிணை உத்தரவு சிறைக்கு செல்லும் முன்பாகவே சிறையிலிருந்த ஈரோடு தோழர்கள் பலரது வீட்டிற்குச் சென்று வீட்டிலிருந்த பெண்களை மிரட்டி அச்சுறுத்தும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது காவல்துறை.




இந்நிலையில் 19.05.09 அன்று பிணை உத்தரவு சிறையை வந்தடைந்தும் உள்நோக்கத்துடன், தாமதமாக அன்றைய தினம் மாலை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உட்பட 12 பேரும், 20.05.09 அன்று மாலை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன் உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தந்தைப் பெரியாரை அவமதித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு பதிவது என்றும், கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட தோழர்களை நிர்வாண சோதனைக்கு உட்படுத்தியதற்காகவும், பிணை வந்தும் இழுத்தடித்து விதிகளுக்கு புறம்பாக தாமதமாக தோழர்களை விடுதலை செய்த கோவை நடுவண் சிறை அதிகாரிகளுக்கு வழக்குரைஞர் தாக்கீது அனுப்புவதென்றும் இளந்தமிழர் இயக்கம் முடிவு செய்துள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்கும் வரை வெவ்வேறு வடிவங்களில் போராட்டத்தை தொடர்வதென்றும் இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்துள்ளது.

சிறை சென்றத் தோழர்கள் பட்டியல்

1. க.அருணபாரதி (ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்),
2. ம.செந்தமிழன் (நிர்வாகக் குழு உறுப்பினர், இளந்தமிழர் இயக்கம்),
3. வெ.இளங்கோவன் (மாவட்டச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி),
4. எல்.எம்.செல்வராசு (மக்கள் சிவில் உரிமைக் கழகம்),
5. டி.கார்த்திகேயன்,
6. வி.கோபி,
7. டி.யுவராஜ்,
8. ஆர்.ரமேசுகுமார் (வழக்குரைஞர்),
9. ஜி.கே.ஈஸ்வரன் (வழக்குரைஞர்),
10. எம்.எஸ்.செயக்குமார்,
11. சமர்ப்பா குமரன்,
12. அன்பழகன்,
13. மதுபாரதி,
14. கலைமதி,
15, சந்திரன்,
16. பரமேஸ்வரன்,
17. எஸ்.கே.எம்.தாஜூதீன்,
18. மொய்தீன்,
19. எஸ்.லோகநாதன்,
20. பாபு,
21. பழனிச்சாமி,
22. எஸ்.புபதி,
23. ஆர்.தமிழ்,
24. செந்தில்குமார்,
25. மூர்த்தி,
26. அப்புசாமி,
27. கருப்பன்,
28. தாயம்மாள்.

0 கருத்துகள்: