இளந்தமிழர் இயக்கத்தின் தமிழீழ ஆதரவு பயணம் தொடங்கியது

Wednesday, February 25, 2009

இளந்தமிழர் இயக்கம் நடத்தும்
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் 
"காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கம்
தஞ்சையில் கோலாகலத் தொடக்கம்
 
தஞ்சை - 26-02-09.
 
தமிழீழ மக்கள் படும் இன்னல்களை மக்களுக்கு விளக்கவும், அதற்குக் காரணமான சிங்கள இனவெறி அரசிற்கு துணை போகும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசைக் கண்டித்தும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நேற்று(25-02-09) தொடங்கியது.
 
தஞ்சை சாந்தி கமலா திரையருங்கு அருகில் நடந்த தொடக்க விழாவில், திரை இயக்குநர் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி,  எழுத்தாளர் தூரன் நம்பி, தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக, "இளந்தமிழர் இயக்கம்" தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயர்நீத்த மாவீரன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியை பற்றியும் விளக்க இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி பேசினார்.
 
"இனத் துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் பேரிடம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்தியக்கம் குறித்தும் காங்கிரசின் இனத் துரோக நடவடிக்கைகள் குறித்தும் இளந்தமிழ இயக்கத்தின் பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தமிழன் பேசினார். மேலும், தோ்தல் அரசியல் சாராத மாணவர்கள் இளைஞர்களை தமிழ் உணர்வை மட்டும் கொண்டு ஒன்றிணைக்கும் இவ்வியக்கத்தை மாணவர்களிடமும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து மாற்று அரசியலுக்கான பாதையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
 
பின்னர் வழக்கறிஞர் நல்லதுலை, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர். "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கத்திற்கு முதல் கையெழுத்தை இயக்குநர் மணிவண்ணன் போட பின்னர் பலரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
 
புதுக்கோட்டை நோக்கி ஒரு அணியும், வேதாரண்யம் நோக்கி ஒரு அணியும் என பரப்புரைப் பயணக்குழுவினர் இரண்டு அணிகளாக பிரிந்து தஞ்சையிலிருந்து கிளம்பி சென்றனர். வழிநெடுகில் பல்வேறு கிராம மக்களிடம் பரப்புரையின் நோக்கம் குறித்தும் தமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் குழுவினர் விளக்கி வருகின்றனர். "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" கையெழுத்து இயக்கப் படிவத்தில் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர்.
 
வட தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு ம.செந்தமிழனும், தென் தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜாவும் வழிநடத்திச் செல்கின்றனர். இப்பயணக்குழுவினர் வருகிற மார்ச் 6 ஆம் திகதி சேலத்தில் நடக்கும் "இன எழுச்சி மாநாட்டில்" சந்திக்கின்றனர்.
 
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழர் இயக்கம்
பேச  : 9841949462

0 கருத்துகள்: